பௌத்த மதத்திற்கு தீங்கு விளைவிப்பதாக ஆட்சியாளர்களுக்கு எதிராக குற்றம்சாட்டி அவர்களுக்கு தெய்வீக தண்டனையை வேண்டிய பாடப்பட்ட வஸ்கவிய எனப்படும் சாபக்கவிதைகளை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தெமட்டகொட பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படுவதை பொலிஸ்; ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது
வஸ்கவியவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டமைக்காக இளைஞர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என வீடியோவொன்று வெளியானதை தொடர்ந்து தெமட்டகொட பொலிஸாரிடம் இது குறித்து விசாரணை செய்தோம்.
எனினும் இதனை நிராகரித்துள்ள தெமட்டகொட பொலிஸார் இது தொடர்பில் எவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
சட்டத்தரணி சுடத் குமாரட்ண என்பவர் சமூக ஊடகங்களில் இது குறித்து தெரிவித்த செய்தி பொய்யானது.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவில் இது குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.