விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி “இன்று ஒடுக்க அடக்குமுறையாளர்களாகச் செயல்படுபவர்கள் நாளை அதன் பாதிக்கப்பட்டவர்களாக மாறக்கூடும்” எனத் தெரிவித்த கருத்துகள் குறித்து லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
நீதிமன்ற அறிக்கைகளின்படி ‘கிரிஷ் பணப்பரிவர்த்தனை புலனாய்வு தொடர்பான நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு புதன்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட உதவி இயக்குநர் தனுஜா பண்டார அலி சப்ரியின் இக்கருத்து ஆணைக்குழுவை நோக்கியதா அதன் புலனாய்வு அதிகாரிகளை நோக்கியதா அல்லது வழக்கின் சாட்சிகளை நோக்கியதா எனக் கேள்வி எழுப்பினார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த பண்டார சாட்சிகள் இருவர் தங்களது உயிருக்கும் தமது குடும்பத்தினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அஞ்சியதால் முன்னர் அளித்த வாக்குமூலங்களில் உண்மையை மறைத்திருந்ததாகக் கூறினார்.
நாமல் ராஜபக்ஷ மற்றும் சக சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரே அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்து உண்மையை வெளிப்படுத்த மேலதிக வாக்குமூலங்களை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அலி சப்ரி குறிப்பிட்டது போல எதிர்காலத்தில் ‘பாதிக்கப்பட்டவர்களாக’ மாறக்கூடிய நபர்கள் இந்த சாட்சிகளா என்றும் பண்டார கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அலி சப்ரி தனது கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இன்று ஜனாதிபதி நீதிமன்றத் தீர்ப்புகளின் தேதிகளை அறிவிக்கிறார். மேலும் 50 பேரைக் கொண்ட பட்டியல் குறித்தும் பேசுகிறார். எனவே தொப்பி பொருந்துபவர்கள் அதை அணிந்துகொள்ளட்டும்” என்று அலி சப்ரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் நீதித்துறையும் சுயாதீனமான நிறுவனங்கள் என்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அலி சப்ரி வலியுறுத்தினார்.
குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் 13(5) உறுப்புரையை சுட்டிக்காட்டிய அவர்இ நாமல் ராஜபக்ஷ தனது அரசியல் கருத்துகளுக்காக பாகுபாட்டை எதிர்கொள்ளவோ அல்லது சிறப்புச் சலுகைகளைப் பெறவோ கூடாது என்று வாதிட்டார்.
மேலும் நாமல் ராஜபக்ஷவின் பெற்றோர்கள் தீவிர நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் அவரது தாயாருக்கு முந்தைய நாள் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அலி சப்ரி நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
விதிவிலக்கான காரணங்களின் அடிப்படையில் பிணை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும் முன்வைக்கப்பட்ட சூழ்நிலைகள் விதிவிலக்கான காரணங்களாக அமையாது என்றும் சாட்சிகள் அச்சுறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த பிணை கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த கொழும்பு முதன்மை நீதவான் அசங்க எஸ். போதரகம நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவு நவம்பர் 3 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்தார்.