இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த சட்டமூலம் கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் சித்திரவதை மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்குவழிவகுக்கும் என எச்சரித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஒக்டோபர் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் காணப்பட்ட ஆபத்தான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தெரிவித்துள்ள போதிலும் இந்த நிலை நீடிக்கின்றது..
இலங்கை அரசாங்கம் இந்த சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டும்இமனித உரிமை மீறல்களுக்கு எதிரான போதுமான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைவரையும் உள்வாங்கிய வெளிப்படையான கலந்துரையாடலை மேற்கொள்ளவேண்டும்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமானது கடந்த ஆறாம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்துடன் இணைந்து நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் உள்ள மனித உரிமை துஸ்பிரயோக ஏற்பாடுகளையே பிரதிபலிக்கின்றது.
அரசாங்கம் முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்த மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கே இவை வழிவகுக்கும்.
ஒக்டோபர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு சட்டமூலங்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மிக மோசமான அம்சங்கள் சிலவற்றை பிரதிபலிக்கின்றன.இந்த சட்டங்கள் அடிப்படை பாதுகாப்பு எதுவுமின்றி நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டமூலத்திற்கு வெளியே அத்துமீறல்களுக்கு வழிவகுக்கும் ஒரு இணையான சட்டகட்டமைப்பை உருவாக்குவதற்காக இத்தகைய துஸ்பிரயோக சரத்துக்களை பயன்படுத்துகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.