சுற்றுலா அமைச்சின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றங்களை இதன்போது தனித்தனியாக ஆராய்ந்த ஜனாதிபதி, அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒல்லாந்து துறைமுகம் சார்ந்த பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாத்துச் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
கடல்வழிச் சுற்றுலாத் துறையை (Marine Tourism) மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டங்களை தொடர்ந்தும் முன்னோக்கிச் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதி வசதிகளை வழங்கும் பொறிமுறையை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளுக்காகக் கடல்வழிப் போக்குவரத்தை (Cruise Tourism) மேம்படுத்துவதற்காக துறைமுகங்களை அண்மித்த பகுதியில் வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் கண்டி என்பன வெறும் சுற்றுலாப் பார்வைப் பிரதேசங்களாக மாத்திரமன்றி, பௌத்த கல்வி மற்றும் ஆன்மீகச் சுற்றுலாத் துறையை (Spiritual and Buddhist Tourism) மையமாகக் கொண்ட சிறப்புவாய்ந்த இடங்களாக சர்வதேசத்திற்கு முன்னால் மேம்படுத்துவதற்கான சாத்தியங்களும், அதற்காக எடுக்கக்கூடிய மூலோபாய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
சூழலியல் சுற்றுலாத் துறையை (Eco-Tourism) மேம்படுத்துவது மற்றும் அது தொடர்பான திட்டங்களை ஊக்குவிப்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையின் தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படும் Southern Mist திட்டத்தின் முன்னேற்றமும் ஆராயப்பட்டது.
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில்திறனை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், சுற்றுலாத்துறை தொடர்பான பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளை வழங்குவதற்காக சுற்றுலாத்துறை பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டு விமான சேவை வசதிகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா ஆகியோருடன் நிதி அமைச்சு, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.