ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பொறுப்பை அங்கீகரிக்கும் அதே வேளையில், இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டமானது சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் இலங்கையை வலியுறுத்தியுள்ளனர்.
11 முக்கிய கரிசனைகள்:
-
ஒரு வருடம் வரை தடுத்து வைத்தல்: பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளருக்கு, பொலிஸ் நிலையங்களில் விசாரணைகள் உட்பட ஒரு வருடம் வரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை வழங்க இச்சட்டம் அனுமதியளிக்கிறது. இது சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையான தடுப்புக்காவல் அபாயங்களை அதிகரிக்கும் என ஐ.நா எச்சரிக்கிறது.
-
நீதிமன்ற மேற்பார்வையின்றி பொலிஸ் காவல்:சந்தேக நபர்களை நீதவான் முன் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக, பயண நேரத்தைத் தவிர்த்து 72 மணிநேரம் வரை தடுத்து வைக்க முடியும். மேலும் 24 மணிநேர பொலிஸ் காவலுக்கும் அதிகாரம் அளிக்கப்படலாம்.
-
பொலிஸாரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படல்: உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) அல்லது அதற்கு மேற்பட்ட தரத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களைச் சாட்சியமாகப் பயன்படுத்த முடியும். அச்சுறுத்தல்கள், தூண்டுதல்கள் அல்லது வாக்குறுதிகள் மூலமே வாக்குமூலங்கள் பெறப்பட்டன என்பதை நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவரையே சாரும்.
-
நீதிமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்குக் கட்டுப்பாடுகள்: முன் அனுமதி பெறாமல் இச்சட்டத்தின் கீழ் வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் சிறைத்தண்டனை உள்ளிட்ட குற்றவியல் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
-
நீதிமன்ற அனுமதியின்றி பொலிஸார் தொலைபேசிப் பதிவுகளைப் பெறுதல்: பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஒருவர் நீதிமன்ற உத்தரவு இன்றி தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களிடமிருந்து சந்தாதாரர் விவரங்கள், அழைப்புப் பதிவுகள் மற்றும் மொபைல் சாதன இருப்பிடத் தகவல்களைப் பெற முடியும். இது ஊடகவியலாளர்களின் இரகசிய ஆதாரங்களை வெளிப்படுத்தக்கூடும் என ஐ.நா எச்சரிக்கிறது.
-
கண்காணிப்பு மற்றும் மறைகுறியாக்கப்பட்ட (Encrypted) தொடர்புகளை அணுகுதல்:முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் இடைமறிப்பு (Interception), டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு மூலமான டிகோடிங் (Decryption) அதிகாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. போதுமான தனியுரிமைப் பாதுகாப்புகளும் சுயாதீன மேற்பார்வையும் வழங்கப்பட்டுள்ளதா என்பதை நிபுணர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.
-
தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்டக்காரர்கள் சட்டத்தின் கீழ் வரக்கூடிய அபாயம்: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கான பரந்த வரையறைகள், சில சூழ்நிலைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போராட்ட இயக்கங்களையும் உள்ளடக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கிறது.
-
நீதிமன்றத்தின் அனுமதியின்றிஇன்றி பொலிஸார் சோதனையிடுதல்: கடுமையான குற்றம் தொடர்பில் நியாயமான சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அவசரத் தேவைக்கான வெளிப்படையான நிபந்தனைகள் இன்றி,
நீதிமன்றத்தின் அனுமதியின்றி (Search Warrant) எதுவும் இல்லாமல் பொலிஸ் அதிகாரிகள் வளாகங்கள் அல்லது நிலங்களுக்குள் நுழைந்து சோதனையிட முடியும். -
பிணை மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் மீதான கட்டுப்பாடுகள்: நீதவான்கள் தடுப்புக் காவல் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்ற சரத்துக்கள் நீதித்துறை அதிகாரத்தைப் பலவீனப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பிணை வழங்குவதும் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும்.
-
தடுப்புக் காவல் அதிகாரங்களிலிருந்து சிறுவர்கள் வெளிப்படையாக விலக்கப்படவில்லை: 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை நீண்டகால பொலிஸ் காவல், தடுப்புக் காவல் உத்தரவுகள் அல்லது சாட்சியங்கள் தொடர்பான சிறப்பு விதிகளிலிருந்து இச்சட்டமூலம் வெளிப்படையாக விலக்கவில்லை. சிறுவர்களுக்கான பாதுகாப்புகள் குறித்து ஐ.நா தெளிவுபடுத்தல் கோரியுள்ளது.
-
அதிகாரிகளுக்கு தண்டனையிலிருந்து பாதுகாப்பு (Immunity): சித்திரவதை, கொடூரமான நடத்தைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட உத்தியோகபூர்வ துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக் கூறுவதைத் தடுக்கும் வகையில் பரந்த அளவில் வரையறுக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சரத்துக்கள் குறித்து ஐ.நா கவலை எழுப்பியுள்ளது.