11 நவம்பர் 2026
கொல்கத்தாவிலிருந்து மும்பை நோக்கி புறப்படவிருந்த 105 பயணிகளைக் கொண்ட ஏர் இந்தியா விமானம், அதன் கழிப்பறை கண்ணாடியில் ‘கடத்தல் எச்சரிக்கை’ (Hijack alert) எழுதப்பட்டிருந்ததை விமானப் பணிப்பெண்கள் கவனித்ததை அடுத்து, புதன்கிழமை காலை புறப்படுவதற்குச் சற்று முன்பாக கொல்கத்தா விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு (Isolation bay) கொண்டு செல்லப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பிற்பகல் 1.30 மணி வரை சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. “AI 772 விமானத்தின் விமானி புறப்படுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, கழிப்பறை கண்ணாடியில் லிப்ஸ்டிக் மூலமாக எழுதப்பட்டதாகக் கருதப்படும் கடத்தல் எச்சரிக்கையை பணிப்பெண்கள் கவனித்துள்ளனர்” என பெயர் குறிப்பிட விரும்பாத விமான நிலைய காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு நடைமுறைகளின்படி, உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டது. “வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாக, விமானத்தை சோதிப்பதற்காக பாதுகாப்புப் படையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புக் குழு உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டனர். பயணிகளும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்” என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
பின்னர், பிற்பகல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளின் லக்கேஜ்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
“இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னும் பின்னும் அவர்களின் நடமாட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும், அத்துடன் அவர்கள் கவனித்த சந்தேகத்திற்கிடமான விஷயங்களை விவரிக்குமாறு கேட்கப்படுவார்கள்” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை 10:37 மணியளவில், கொல்கத்தாவிலிருந்து (CCU) மும்பை (BOM) நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா AI 2772 (A320, பதிவு VT-TNH) விமானத்தின் கழிப்பறைக்குள் கடத்தல் குறித்த குறிப்பு ஒன்றை பணிப்பெண்கள் கண்டெடுத்தனர். இதனையடுத்து, விதிகளுக்குட்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தேவையான பாதுகாப்புச் சோதனைகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன” எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.