அனோஜன் சிவராசாவுக்கு எதிரான சட்ட வழக்கை சவுதி
அரேபியா முறைப்படி முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
முன்னதாக 2026 அக்டோபர் 13 அன்று சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்து, மேல் நடவடிக்கைகளுக்காக வழக்கை மீண்டும் அனுப்பியமை உள்ளிட்ட தொடர்ச்சியான சட்ட முன்னேற்றங்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது அரசுத் தரப்பின் தொடர் விசாரணைகளுக்குப் பிறகு, வழக்கு அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த முந்தைய தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், 2026 நவம்பர் 11 அன்று சிவராசாவின் குடும்பத்தினரைச் சந்தித்து, வழக்கின் முடிவு மற்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவதற்கான தற்போதைய ஏற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
சவூதி அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கு இலங்கை அரசாங்கம் தனது பாராட்டைத் தெரிவித்துள்ள அதேவேளையில், ரியாத் நகருக்கு விஜயம் செய்த இலங்கைச் சட்ட நிபுணர்களின் பங்களிப்பையும், இலங்கைத் தூதரகத்தின் இராஜதந்திர முயற்சிகளையும் சுட்டிக்காட்டி நன்றியையும் தெரிவித்துக் கொண்டது.
அவரை விரைவாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நிர்வாக நடைமுறைகளை பூர்த்தி செய்ய இலங்கை வெளிவிவகார அமைச்சு சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.