சிறையிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உருக்கமான பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தந்தையின் மீது தான் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் தனது சிறைச்சாலையின் சுவர்களுக்கு அப்பாற்பட்டவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டுப் பகிர்ந்துள்ள அந்தச் செய்தியில், குடும்பத்தினரிடமிருந்து மற்றும் அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிந்து தான் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வருவதால், தனது தந்தையின் அருகில் சென்று நேரில் வாழ்த்த முடியாத நிலையில் இருப்பதாக நாமல் கூறியுள்ளார்.
வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள தனது தந்தை கற்பித்த பாடங்களும், காட்டிய தைரியமும் மற்றும் அவரது முன்னுதாரணமும் தனக்கு பலம் சேர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டின் வரலாற்றில் மிகக் இருண்ட காலங்களில் ஒன்றில் தனது தந்தை வழங்கிய தலைமைத்துவத்தை நினைவு கூர்ந்த நாமல், எவ்வித பயமுமின்றி உறுதியாக நின்று மஹிந்த ராஜபக்ச எண்ணற்ற குடும்பங்களுக்கு அமைதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று குறிப்பிட்டார்.
பெரும் பொறுப்புக்களைச் சுமக்கும் போது தனது தந்தை வெளிப்படுத்திய பொறுமை, தைரியம் மற்றும் விடாமுயற்சியை இப்போது தான் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், உண்மைக்காகப் போராடும் போது தான் எதிர்கொள்ளும் சிரமங்கள், ஒரு தந்தைக்குத் தேவையான வலிமையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள தனக்கு உதவியுள்ளதாகவும் நாமல் தெரிவித்தார்.
தனது தந்தையின் பிறந்தநாளில் தன்னால் உடன் இருக்க முடியாது விட்டாலும், தனது பிள்ளைகள் சென்று தாத்தாவைத் தழுவி தமது வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள் என்று அவர் கூறினார்.
அரசியல் அழுத்தங்கள், அவமானங்கள் மற்றும் பல்வேறு கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்தவராகவும் மஹிந்த ராஜபக்சவை வர்ணித்துள்ள நாமல், அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் மகிழ்ச்சியையும் வாழ்த்தியுள்ளார்.
“தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவை தூரம்கூட உடைக்க முடியாது” என்று அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.