பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதோ மாற்றியமைப்பதோ அல்லது பெயர்களை மாற்றுவதோ அல்ல; அதனை முற்றிலுமாகக் கிழித்தெறிய வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்ஆகியவற்றுக்கு எதிரான கூட்டுப் பிரகடன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“சட்டத்தின் விளைவு இன்று வரை 16 வருடங்களாக 16 அல்லது 17 வருடங்களாக இருவர் விசாரணைகள் முடியாமலே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்று தெரியாமலே 17 வருடங்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மட்டுமல்ல இதேபோன்று பல இளைஞர்கள் 10 வருடங்களுக்கு மேலாகஇ 15 வருடங்களாகச் சிறையிலிருந்து பின்னர் குற்றமற்றவர்கள் என்று விடுதலையாகி இருந்தார்கள். இந்தச் சட்டத்தை நாம் ஏன் எதிர்க்கின்றோம் என்பதற்கு இதைவிடத் தெளிவான ஒரு காரணம் எங்களிடம் கிடையாது.
அதேபோல் ஈஸ்டர் தாக்குதலின் பிற்பாடு அல்லது அதற்கு முன்னர்இ முஸ்லிம்களோடு ஏதோ ஒரு வகையிலே ஒரு இனப்பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எத்தனை அப்பாவி முஸ்லிம்களை இந்தச் சட்டம் தண்டித்திருக்கின்றது என்பதை நாங்கள் மறந்துவிட முடியாது. வைத்தியர் ஷாபி அவர்களுடைய கதை அதன் பிற்பாடு ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ரம்சி ராசிக் என்று மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் மக்களுக்காகச் சேவை செய்து கொண்டிருந்தவர்கள் திடீரென அரசாங்கத்தின் பார்வையிலே தீவிரவாதியாகத் தெரிந்தார்கள்.
எனவேஇ வரப்போகின்ற அரசாங்கம் அல்லது இப்பொழுது இருக்கின்ற அரசாங்கம் யாரைத் தீவிரவாதி என்கின்றது என்பதை அவர்கள் எப்பொழுதுஇ எப்படித் தீர்மானிப்பார்கள் என்பதை யாராலும் ஊகிக்க முடியாத ஒரு நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
சட்டம் என்கின்ற போர்வையிலே வெறுமனே அடக்குமுறை அதிகாரம் ஒன்றை அரசினுடைய தலைமைக்கு வழங்குகின்ற ஒரு விடயமாகவே நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டங்களைப் பார்க்கின்றோம். இப்படியான ஒரு அதிகபட்ச அதிகாரமும்இ அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடிய ஒரு விடயத்தையும் வைத்துக்கொண்டுஇ ஒரு நாட்டில் மக்கள் தங்களுக்கான ஆட்சியைத் தாங்களே நடத்துகின்றார்கள் என்ற அந்த நினைப்பில் இருப்பது மிகவும் அபத்தமானது.
மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்; நீதித்துறை என்பது அரசிலிருந்து தனியாக இருக்கின்ற ஒன்று சுயாதீனமான ஒன்று. அந்த நீதித்துறையை அரச தலையீடு இன்றி நடத்த வேண்டியது அனைவரது கடப்பாடு. ஆனால்இ ஒரு கையெழுத்தின் ஊடாக உங்களை வருடக் கணக்கிலே தடுத்து வைக்க முடியும் என்றால் அப்படியான ஒரு சட்டத்தை நீங்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும். நாளை உங்கள் எவருக்கும் இந்தச் சட்டம் உங்கள் தலைக்கு மேல் இருக்கின்ற கத்தியாக மாறலாம். ஏனென்றால் கைதானவர்களுடைய வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் அவர்கள் சாதாரண மக்களாக இருந்திருக்கின்றார்கள். அப்பாவிகளாகத் தாங்களும் தங்கள் வேலையும் என்று இருந்தவர்கள் கூடத் தீவிரவாதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
எனவேஇ இந்தச் சட்டத்தைத் திருத்துவதோ அல்லது மாற்றியமைப்பதோ அல்லது பெயர்களை மாற்றுவதோ நாங்கள் கேட்காத ஒரு விடயம். இந்தச் சட்டத்தை முழுமையாகக் கிழித்தெறிய வேண்டும்; இந்தச் சட்டம் இருக்கவே கூடாது. இந்தச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படும் என்கின்ற NPP-யினுடைய 129 ஆவது பக்கத்தில் இருக்கக்கூடிய அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிக்கப்பட்டுள்ள அந்த வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்; மக்களை ஏமாற்றக் கூடாது” என தெரிவித்தார்.