செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பல என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமையப் புதைக்கப்படவில்லை என்பது வெளிப்படையானது என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதியரசர் எஸ். லெனின்குமார் தெரிவித்துள்ளார்.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் பிற்பகல் இடம்பெற்ற வேளையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். விசாரணையின் போது, பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்த தடயவியல் அறிக்கை தொடர்பில் சட்டத்தரணிகள் பலரும் தமது ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி எஸ். லெனின்குமார், செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட பல என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமையப் புதைக்கப்படவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.
செம்மணி மனிதப் புதைகுழி: என்புத் தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அப்பாற்பட்டவை – நீதிபதி எஸ். லெனின்குமார்
அத்துடன், செம்மணிப் புதைகுழி தொடர்பாக ஆரம்பத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவ வழங்கிய அறிக்கைகளுக்கும், இறுதியாக வழங்கிய அறிக்கைக்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இறுதி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை அவர் தனது ஆரம்பகட்ட அறிக்கைகளில் வெளிப்படுத்தாமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவித்த நீதிபதி, அவரது செயற்பாடு அரசு நிதியை விரயம் செய்யும் வகையிலும் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.