டெல்லி- செங்கோட்டை கார்வெடிப்பு சந்தேக நபர் உமர் நபிக்குச் சொந்தமான சிவப்பு நிற ஃபோர்டு ஈகோஸ்போர்ட் (Ford EcoSport) கார், ஹரியானாவின் கண்டாவாலி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருந்து ஹரியானா காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் நபியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், இன்று முன்னதாகவே இந்தக் காரைத் தேடிப் பல மாநிலங்களில் ரெட் அலர்ட் விடுத்திருந்தனர். தகவல்களின்படி, அந்தக் கார் நபியின் நண்பருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் கண்டறியப்பட்டது. அந்த நண்பர் தற்போது காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. அந்தக் காரில் தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழு தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார்வெடிப்பு சம்பவத்தின்போது நபி ஓட்டி வந்த ஐ20 கார், முன்னர் புல்வாமாவைச் சேர்ந்த ஒரு பிளம்பரின் (Plumber) பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவரும் தற்போது காவல்துறை விசாரணையில் உள்ளார். செங்கோட்டை அருகே வெடித்த அந்த வாகனத்தில் 60 கிலோவுக்கும் அதிகமான அமோனியம் நைட்ரேட் இருந்திருக்கலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன