வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க சூறாவளி
நாட்டை விட்டு விலகி அதன் நேரடி விளைவுகள் குறைந்திருந்தாலும் அதன் மறைமுக விளைவுகள் இன்னும் நீடிப்பதாகத் தெரிவித்தார்.
வடக்கு வட மத்திய கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகமாக மழைப்பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்தார்.
மேலும் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீ-க்கும் அதிகமாக மழைப்பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஏனைய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கனமழை குறைந்திருந்தாலும் அனர்த்த நிலைமை இன்னும் முழுமையாகத் தணியவில்லை. எனவே நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தற்போது வீடு திரும்புவதைத் தவிர்க்குமாறு கருணாநாயக்க வலியுறுத்தினார்.
சூறாவளி நிலைமைகளால் சேதமடைந்த மின்கம்பிகள் இன்னும் முழுமையாகச் சீர் செய்யப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான அறிவிப்புகளை வெளியிடும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் கிணற்று நீரை முறையாகச் சுத்திகரிக்கும் வரை அதனைக் குடிப்பதில் இருந்து விலகியிருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதுமட்டுமல்லாமல் இலங்கையில் தொடரும் மறைமுக தாக்கத்தின் காரணமாக இலங்கைமற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 60–70 கி.மீஃமணி வரை அதிகரிக்கக்கூடும். எனவே மீனவர்களும் கடற்படை வீரர்களும் இன்று கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இந்த மறைமுக விளைவுகள் நவம்பர் 30-ம் திகதிக்குள் தீவை விட்டு விலகும் என்றும் அதன் பிறகு நாடு முழுவதும் இயல்பான வானிலை நிலவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
