சூறாவளி காரணமாக இலங்கையில் சிக்குண்டிருந்த 750க்கும் அதிகமான இந்திய பிரஜைகளை இந்தியா பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது.
சகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய பிரஜைகள் விமானப்படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
வெளியேற்ற நடவடிக்கைகளுடன் சேர்த்து கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ இந்தியா தனது தேடல் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
நேற்று (29) ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலின் சேத்தக் ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வான்வழியாகக் கொண்டு சென்றன. அதே சமயம் இன்று (30) இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர்கள் அணுக முடியாத கொத்மலை பகுதிக்கு அருகில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்கள் பச்சிளம் குழந்தைகள் ஆபத்தான காயமடைந்த தனிநபர்கள் மற்றும் பல நாடுகளின் குடிமக்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்டவர்களைக் கொழும்புக்குக் கொண்டு சென்றதோடு இலங்கை இராணுவப் படையினரை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்தன. என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சிறப்பு வாய்ந்த அனர்த்தப் பதிலளிப்பு அமைப்பான தேசிய அனர்த்தப் பதிலளிப்புப் படைகுழுக்கள் நேற்று வந்தடைந்து கொச்சிக்கடையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவர்கள் இப்போது பலத்த சேதமடைந்த புத்தளம் மற்றும் பதுளைப் பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதுடன் அவர்களின் உடனடிப் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனர்.
