‘தித்வா’ புயல் (Cyclone Ditwah) காரணமாக இலங்கையில் 2,75,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியை (humanitarian crisis) எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
இந்தப் புயலால் பரவலான வெள்ளமும் பேரழிவு தரும் மண்சரிவுகளும் ஏற்பட்டன. தொடர்ந்து இடம்பெறும் மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் 400 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 350 இற்கும் அதிகமானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும், அணுகல் பாதைகள் தடைப்பட்டதாலும் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் மக்களில் 2,75,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் உள்ளனர் என்று ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன என்று UNICEF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“புயல் சிறுவர்களுக்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக அவர்கள் நம்பியிருக்கும் முக்கிய சேவைகளுக்கும் ஏற்படுத்தியுள்ள அழிவு குறித்து UNICEF ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது,” என்று இலங்கையில் உள்ள UNICEF பிரதிநிதி எம்மா பிரிகாம் (Emma Brigham) தெரிவித்தார்.

“சிறுவர்களுக்கு அவசரமாக உதவி தேவை. உயிர் காக்கும் சேவைகள் அவசரமாகத் தேவைப்படும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களைச் சென்றடைய இது காலக்கெடுவுடனான ஒரு பந்தயமாகும்,” என்றும் அவர் மேலும் கூறினார். “மேலும் புயல் கடந்து சென்றிருக்கலாம், ஆனால் அதன் விளைவுகள் இன்னும் நீங்கவில்லை.”
வீடுகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதமும், அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டிருப்பதும் பரவலான இடப்பெயர்வுக்கு வழிவகுத்துள்ளதுடன், சிறுவர்களிடையே நோய் பரவுதல், ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகள் மற்றும் கடுமையான மன உளைச்சல் (severe emotional distress) போன்ற அபாயங்களை அதிகரிக்கச் செய்கிறது என்று ஐ.நா நிறுவனம் கூறியுள்ளது.
“2022 பொருளாதார நெருக்கடி உட்பட அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் இருந்து இன்னும் மீண்டு வராத இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் போராட்டங்களை இந்தப் புயல் மேலும் ஆழமாக்கும்,” என்று அது அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மில்லியன்கணக்கான குடும்பங்களுக்கு, அத்தியாவசியத் தேவைகள் எட்டாக்கனியாகி, வாழ்க்கை இன்னும் கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது என்றும், நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்களை மேற்கோள் காட்டி அது கூறியது.
மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் அவசரத் தேவைகளுக்கு பதிலளிக்கும் நோக்குடன், இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு மற்றும் தாய்மார்களுக்கு சுத்தமான குடிநீர், அத்தியாவசிய ஊட்டச்சத்துப் பொருட்கள், உளவியல் ஆதரவு மற்றும் அவசரக் கல்வி கருவிகள் (emergency education kits) ஆகியவற்றை வழங்குவதற்காக UNICEF தனது முயற்சிகளை மேலும் அதிகரித்து வருவதாகவும், மேலதிக நிதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும் அது கூறியது.
