தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organization – NBRO), கடந்த சில நாட்களில் 215 கடுமையான மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவுகள் பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, கேகாலை, குருநாகல், மற்றும் மொனராகலை மாவட்டங்கள் முழுவதும் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட புவியியலாளர் லக்ஷிரி இந்திரதிஸ்ஸ (Laksiri Indratissa) தெரிவித்தார்.
இந்தச் சம்பவங்கள் வீதி வலையமைப்புகள் மற்றும் கிராமங்களுக்குள்ளும் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார்.எவ்வாறாயினும், அணுகல் வீதிகள் தடைப்பட்டமை, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக மண்சரிவு ஏற்பட்ட பல இடங்களை அதிகாரிகளால் அணுக முடியவில்லை.
மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்குப் பின்னரும் வெளியேறத் தவறியமை மண்சரிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது என்றும் NBRO மேலும் குறிப்பிடுகிறது.