நாடு முழுவதும் மீட்பு மற்றும் வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், எதிர்வரும் நாட்களில் மழைப்பொழிவு நீடிக்குமானால் தற்போதைய நடவடிக்கைகளுக்குச் சவாலாக அமையக்கூடும் என்பதால் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கின்றனர்.
மீட்பு நடவடிக்கைகள் மற்றும் வெளியேற்றும் முயற்சிகள் மழையால் இதுவரை பாதிக்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (Disaster Management Centre – DMC) பணிப்பாளர் பிரதீப் கோடிப்பிளி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்பார்க்கப்படும் மழை வீழ்ச்சி கள நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்க ஆரம்பித்தால் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், நிலைமைகள் மோசமடைந்தால் விரைவாகப் பதிலளிக்க குழுக்கள் உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய நிலைமை அறிக்கையின்படி, நவம்பர் 16 ஆம் திகதி முதல் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக நேற்று மாலை 6.00 மணி வரை மொத்தம் 481பேர் உயிரிழந்துள்ளனர்மற்றும் 345 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்த அனர்த்தம் இதுவரை தீவு முழுவதும் 1,814,534 குடும்பங்களைச் சேர்ந்த 506,680 பேரை பாதித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, மொத்தம் 1,967 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 50,173 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் மழைப் பொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மதியம் 1.00 மணிக்கு பின்னரும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுவதுடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
கூடுதலாக, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்