அவசரகாலச் சட்டங்கள், கருத்துச் சுதந்திரம் அல்லது அரசாங்கத்தை நோக்கிய விமர்சனங்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அநுர குமாரதிசநாயக்கஇன்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.
பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அண்மையில் தெரிவித்த கருத்துக்களால் எழுந்த கவலைகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, அந்தக் கூற்று தொடர்பில் “தேவையற்ற அமளி” நிலவுவதாகவும், அவசரகாலச் சட்டத்தின் கீழ் பொதுமக்களின் கருத்துக்கள் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படாது என்றும் வலியுறுத்தினார்.
தமக்கோ அல்லது நிர்வாகத்திற்கோ எதிராக முன்வைக்கப்படும் விமர்சன அல்லது பாதகமான கருத்துக்களால் தாம் சலனப்படுவதில்லை என்று அவர் கூறினார், அத்துடன் அவதூறான உள்ளடக்கங்களைக் கையாள தேவைப்பட்டால் இருக்கும் சட்டங்களே போதுமானவை என்றும் அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே அச்சத்தை பரப்புபவர்கள் அல்லது நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி திஸாநாயக்க எச்சரித்தார். தேசிய நெருக்கடியின் போது இத்தகைய செயல்கள் சமூகத்தை சீர்குலைக்கும் முயற்சிகளாகக் கருதப்படும் என்றும் அவர் கூறினார்.
“கருத்துக்கள் அல்லது அபிப்பிராயங்களை ஒடுக்க நாங்கள் ஒருபோதும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்த மாட்டோம். தனிப்பட்ட முறையில் என்னை இலக்காகக் கொண்ட அவதூறான கருத்துக்கள் இருந்தால், நான் முன்னரே கூறியது போல், அவை சாதாரண சட்டங்களின் கீழ் கையாளப்படும்,” என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்க அமைச்சர்களை இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்களில் தவறான அல்லது தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களைப் பரப்பியதாகக் கூறப்படும் வெளிநாட்டவர்கள் உட்பட தனிநபர்களுக்கு எதிராக அவசரகால விதிகளைப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் வட்டகல பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்தே இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன
