மண்சரிவுகளால் இடம்பெயர்ந்தவர்கள் அந்தப் பகுதிகள் பாதிக்கப்படக்கூடியவை எனத் தெரிந்தால் தங்கள் சேதமடைந்த வீடுகளுக்கோ அல்லது நிலங்களுக்கோ திரும்பிச் செல்ல அரசாங்கம் அனுமதிக்காது என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி அவர்கள் தி சண்டே டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மண்சரிவு அபாயமுள்ள நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் என்றும் நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்களுக்கு மாற்று நிலங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மண்சரிவுஅபாயமுள்ள பகுதிகளில் மக்கள் குடியேறுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட நிலச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
“சுனாமிக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நிலம் கொடுத்தது ஆனால் கடல் அரிப்பு அல்லது சுனாமியால் ஆபத்தில் உள்ள பகுதிகளில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தவில்லை. இதன் விளைவாக இடம்பெயர்ந்தவர்கள் புதிய நிலங்களைத் தக்க வைத்துக் கொண்ட அதே வேளையில் தங்கள் பழைய நிலங்களுக்கே திரும்பிச் சென்றனர்” என்று அவர் கூறினார்.
அத்தகையதொரு நிலைமையை தடுப்பதற்காக மண்சரிவு அபாயமுள்ள நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.
பேரழிவுக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு முதலில் மேற்கொள்ளப்படும் என்றும் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
நிதி அமைச்சகத்தின் தேசிய திட்டமிடல் பிரிவால் செய்யப்படவுள்ள இந்த மதிப்பீடு குறைந்தது மூன்று மாதங்களாவது எடுக்கும் என்று அவர் கூறினார்.
