மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை-வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் எவ்விதமான முறைகேடுகளுக்கோ, பாரபட்சங்களுக்கோ அல்லது ஊழலுக்கோ இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. இது ஊழலை முற்றாக ஒழித்து, நேர்மையான நிர்வாகத்தை நிலைநாட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கமாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் உதவித்தொகை வழங்கல் தொடர்பில் முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஆளுநர், இது குறித்து இன்று விசேட தெளிவுபடுத்தலை வெளியிட்டார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
ஜனநாயகக் கட்டமைப்பில் அரச செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதையும், விழிப்புடன் இருப்பதையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்கள் மத்தியில், உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பது சமூகப் பொறுப்புள்ள அனைவரதும் கடமையாகும்.
உதவித்தொகை வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடினேன். அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு அமையவே பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராமமட்ட ஏனைய அலுவலர்கள் ஊடாகத் தெரிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித இரகசியத் தன்மையும் இல்லை. உதவித்தொகை பெறத் தகுதியானவர்களின் பெயர்ப்பட்டியல் அந்தந்தப் பகுதிகளில் பகிரங்கமாகத் காட்சிப்படுத்தப்படும். இதனை மாவட்டச் செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, தகுதியான எவரும் விடுபடவோ, தகுதியற்ற எவரும் உள்நுழைவதற்கோ இதில் வாய்ப்புகள் இல்லை.
மிக முக்கியமாக, மக்களுக்கான உதவித்தொகை இன்னமும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவில்லை. அவ்வாறு பணம் வைப்பிலிடப்படும் முன்னரே, ‘முறைகேடுகள் நடந்துவிட்டதாக’ அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் செய்திகள் அடிப்படையற்றவை. தெரிவுப் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னரே கொடுப்பனவுகள் இடம்பெறும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சமடையத் தேவையில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பிரதான இலக்கு, அரச இயந்திரத்தில் புரையோடிப்போயிருந்த ஊழலை ஒழிப்பதேயாகும். எனவே, மக்களின் கண்ணீரில் இலாபம் தேடும் ஈனச் செயலுக்கோ அல்லது முறைகேடுகளுக்கோ இனி இடமில்லை.
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது – அவர் எந்த நிலையிலிருந்தாலும் – தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைக் கடந்து, முறைகேடுகள் தொடர்பில் யாரிடமேனும் தகுந்த ஆதாரங்கள் இருப்பின், அதனை எனது கவனத்துக்கு நேரடியாகக் கொண்டு வரலாம். ஆதாரபூர்வமான முறைப்பாடுகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச இயந்திரம் மக்களுக்காகவே இயங்குகிறது. இந்த இக்கட்டான நேரத்தில், காழ்ப்புணர்ச்சிகளைத் தவிர்த்து, நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் ஒன்றிணைந்து எமது மக்களை மீட்டெடுப்போம், என வடக்கு மாகாண ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்