தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அற்றார் அழிபசி தீர்த்தல் செயற்திட்டத்தின்கீழ் டிட்வா புயல் ஏற்படுத்திய வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றிருக்கும் குடும்பங்களில் முதல் கட்டமாக 110 குடும்பங்களைத் தெரிவுசெய்து நேற்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்துள்ளது. யாழ். மாவட்டத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களான நாவாந்துறை, கல்லுண்டாய் ஆகிய பகுதிகளில் இருந்து இக்குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

உலருணவுப் பொதிகள் லக்ஸ்மி பிளாசா மண்டபத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிதியை அமரர் பொ. பரமேஸ்வரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பிள்ளைகள் வழங்கியிருந்தனர். இந்நிகழ்ச்சியில் திருமதி பராசக்தி பரமேஸ்வரன், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ம.கஜேந்திரன், உப பொதுச்செயலாளர் சண்.தயாளன் ஆகியோர் கலந்துகொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்கள்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர் ஏற்பட்ட 2020ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து பொருளாதார ரீதியான மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளில் அற்றார் அழிபசி தீர்த்தல் செயற்திட்டத்தின் மூலம் உலருணவுப் பொதிகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது