அனர்த்தத்திற்குப் பின்னான மீட்சிக் காலத்தில் கல்வி குழந்தைகளுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்றும், அவர்களின் உளவியல் மற்றும் சமூக நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய அணுகுமுறை, அனர்த்த நிலைமைகளின் போது ஆதரவான பாடசாலைச் சூழலை வளர்க்க உதவும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
சமீபத்திய அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பது மற்றும் மாணவர்களுக்காகப் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான நுவரெலியா மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு டிசம்பர் 16 அன்று நாடு முழுவதும் பாடசாலைகளை மீண்டும் திறக்க முடிவு செய்திருந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து (NBRO) பரிந்துரைகளைப் பெற வேண்டும் என்றும், அத்துடன் அணுகல் வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
கஷ்டங்களை அனுபவித்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆறுதலான உடையை அணிய நெகிழ்வுத்தன்மை அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
சவால்கள் பல இருந்தபோதிலும், கல்விச் சீர்திருத்தங்கள் வேகமாக முன்னேறி வருவதாகவும், நுவரெலியா மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான 51% பயிற்சி நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் கூட்டத்தின் போது பிரதமருக்குத் தெரிவித்தனர்.
அனர்த்த நிலைமைக்குப் பிறகு முன்னர் இருந்ததை விட ஒரு சிறந்த நிலையை அடைவதற்கு, இந்தக் கூட்டான சவால்களைக் கடந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அவர் கூட்டத்தில் உரையாற்றும்போது மேலும் வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
