இலங்கையில் சூறாவளியால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளும் சேதங்களும் இதயத்தை உலுக்குகின்றன என தெரிவித்துள்ள கனடாவின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் ரந்தீப் சராய் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அவசரகாலநிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக கனடா இரண்டு மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் பரவலான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய ‘டிட்வா’ சூறாவளியால் நாடு பெரும் அழிவைச் சந்தித்துள்ளது. இந்த பேரிடர்கள் உயிர்களைப் பறித்துள்ளதுடன், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை கடுமையாகப் பாதித்துள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அவசரகால நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான மனிதாபிமான உதவி நிதியை சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ரந்தீப் சராய் (Randeep Sarai) அறிவித்தார். அந்த நிதி பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது:
-
1.4 மில்லியன் டொலர்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) வழங்கப்படுகிறது.
-
350,000 டொலர்: கனடிய மனிதாபிமான உதவி நிதியத்தின் ஊடாக நிவாரணப் பொருட்கள், அவசரகால தங்குமிடங்கள், அத்துடன் நீர், சுகாதாரம் மற்றும் தூய்மைச் சேவைகளை வழங்க ‘வேர்ல்ட் விஷன் கனடா’ (World Vision Canada) அமைப்புக்கு வழங்கப்படுகிறது.
-
215,000 டொலர்: கனடிய செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் அவசர பேரிடர் உதவி நிதியத்தின் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தற்போதைய நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வழங்கப்படுகிறது.
-
சுமார் 70,000 டொலர்: அவசரகால நிவாரணங்களை வழங்குவதற்காக உள்ளூர் முயற்சிகளுக்கான கனடா நிதியத்தின் (Canada Fund for Local Initiatives) மூலம் வழங்கப்படுகிறது.
கனடா தற்போதைய நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், மாறிவரும்த் தேவைகளை மதிப்பீடு செய்து பதிலளிப்பதற்காக அனுபவம் வாய்ந்த பங்காளர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.
முக்கிய கருத்துக்கள்
“‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் அழிவுகளும் இதயத்தை உலுக்குகின்றன. இந்த இக்கட்டான நேரத்தில் கனடா இலங்கை மக்களுடன் உறுதுணையாக நிற்கிறது. இந்த ஆதரவு உடனடி நிவாரணத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. மீட்புப் பணிகள் முன்னேறும்போது, மேலதிக உதவி வழிகளைக் கண்டறிய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” — ரந்தீப் சராய், சர்வதேச அபிவிருத்தி அமைச்சர்
“‘டிட்வா’ சூறாவளி கற்பனை செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் இலங்கையில் பல குடும்பங்களும் சமூகங்களும் பேரழிவையும் நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொள்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுடன் கனடா நிற்கிறது. சமூகங்கள் மீண்டெழுவதற்கும் மீண்டும் கட்டியெழுப்பவதற்கும் மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவை கனடா தொடர்ந்து வழங்கும்.” — ஹரிஆனந்தசங்கரி, பொது பாதுகாப்பு அமைச்சர்.
