அண்மைய அனர்த்தங்களினால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்கும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச உதவியைப் பெற இலங்கை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில், அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இது குறித்து தெரிவிக்கையில், மறுசீரமைப்பு தேவைப்படும் முன்னுரிமை துறைகள் மற்றும் அதற்கான மதிப்பிடப்பட்ட செலவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என குறிப்பிட்டார். இந்த அறிக்கையானது வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்கான அடிப்படையாக அமையும்.
“தற்போது நெடுஞ்சாலைகள், ரயில்வே அமைப்புகள், நீர்ப்பாசன வலைப்பின்னல்கள் அல்லது ஏனைய முக்கிய உட்கட்டமைப்புகள் என பல அத்தியாவசிய சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் திட்டங்களாகத் தொகுத்து, முன்னுரிமைப்படுத்தி, வெளிநாடுகளின் அவசியமான தலையீட்டைப் பெறத் திட்டமிட்டுள்ளோம். தத்தமது முன்னுரிமைத் திட்டங்களை உடனடியாக இறுதி செய்யுமாறு அனைத்து அமைச்சுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தற்காலிகத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், எமக்கு நிரந்தரத் தீர்வுகள் தேவைப்படுகின்றன. திட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டதும், வெளிவிவகார அமைச்சின் ஊடாக அவற்றை நேரடியாக ஏனைய நாடுகளிடம் முன்வைத்து, அவற்றின் பூர்த்திக்கு அந்நாடுகளின் பங்களிப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் விளக்கினார்.
