இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற தொடர்ச்சியான “பயங்கரவாத தாக்குதலில்” இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்தாரி கிழக்கு நகரமான பெய்ட் ஷீனில் (Beit Shean) பாதசாரி ஒருவர் மீது வாகனத்தை மோதியதாகவும், பின்னர் அங்கிருந்து சுமார் 12.5 கி.மீ (8 மைல்) தொலைவிலுள்ள ஈன் ஹரோட் (Ein Harod) பகுதிக்குச் சென்று பெண் ஒருவரை கத்தியால் குத்தியதாகவும் காவல்துறையினர் கூறினர்.
இறுதியில் அஃபுலா (Afula) நகருக்கு வெளியே ஒரு பொதுமக்களால் அவர் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்டார். தாக்குதலை நடத்திய சந்தேக நபர், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கு பகுதியில் உள்ள கபடியா (Qabatiya) கிராமத்தைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் (Magen David Adom) அவசர சேவைப் பிரிவின் தகவல்படி, பெய்ட் ஷீனில் நிகழ்ந்த வாகன மோதலில் 68 வயதுடைய முதியவர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 16 வயது சிறுவன் காயமடைந்தார். ஈன் ஹரோட் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் 18 வயது இளம்பெண் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, கபடியா பகுதியில் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கத் தயாராகி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன. பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இராணுவத்தை “உடனடியாகவும் வலுவாகவும்” செயற்படுமாறு பணித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவியதாக இராணுவம் கூறியது. குறித்த 37 வயதுடைய நபர் இஸ்ரேலில் சட்டவிரோதமாகப் பணியாற்றி வந்தவர் என்றும், தனது முதலாளியின் வாகனத்தைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேலின் கான் நியூஸ் (Kan News) ஊடகம் தெரிவித்துள்ளது.