பேரழிவுச் சூழலால் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக, தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல், ஒரு வீட்டிற்கு ரூ. 500,000 வீதம் வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
“பிரஜா சக்தி” (Praja Shakthi) முன்முயற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், முறையான சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு முன்பே ஆரம்பகட்ட நிதி உதவி வழங்கப்பட்டதாக அமைச்சர் விளக்கினார்.
பகுதியளவில் சேதமடைந்த 120,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு சுமார் ஒரு வருடம் காலம் எடுக்கும் என்றும், இது நிவாரணம் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எனவே, சரியான நேரத்தில் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மதிப்பீடு ஏதுமின்றி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ. 500,000 நிலையான தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.
இருப்பினும், முறையான சேத மதிப்பீட்டை மேற்கொள்ள விரும்பும் குடும்பங்கள் இந்த நிலையான கொடுப்பனவைத் தவிர்க்கலாம் என்றும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் மதிப்பீடு செய்யப்பட்ட சேத மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“மதிப்பீடு செய்யப்பட்ட சேதத்தின் மதிப்பு ரூ. 2.5 மில்லியன் அல்லது ரூ. 5 மில்லியனாக இருந்தாலும், அதற்கேற்ப முழு மதிப்பீட்டுத் தொகையையும் அரசாங்கம் வழங்கும்,” என அவர் மேலும் கூறினார்.
