மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பல பாடசாலைகள் தொடர்பாக அவசரமாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
சமீபத்திய அபாய மதிப்பீட்டு ஆய்வுகளின்படி, நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள பல பாடசாலைகள் நேரடியாக மண்சரிவு அபாயத்திற்கு ஆளாகியுள்ளதாக NBRO பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கலாநிதி ஆசிறி கருணாவர்தன தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சில பாடசாலை வளாகங்களை பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்த முடியும் என்றும், அவ்வாறு செய்ய முடியாத மற்றும் மாற்று முடிவுகள் தேவைப்படும் பாடசாலைகள் குறித்து கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தர மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் ஹசலக பகுதியைத் தவிர வேறு எந்தப் பாடசாலைகளும் அபாயகரமானவை என அடையாளம் காணப்படவில்லை.
மத்திய மாகாணத்தில் உள்ள 160 பாடசாலைகளை உள்ளடக்கிய விரிவான மதிப்பீட்டு அறிக்கை ஏற்கனவே கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கலாநிதி கருணாவர்தன தெரிவித்தார். இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அடையாளம் காணப்பட்ட அதிக அபாயமுள்ள பாடசாலைகள் குறித்து மேலதிக ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுகள் கல்வி அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்
