பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரின் டாக்கா கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளரும், பங்களாதேஷ் கட்டுப்பாட்டுச்சபையின் (BCB) வேகப்பந்து வீச்சு நிபுணருமான மஹ்மூத் அலி ஜாகி, சனிக்கிழமை போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
சில்ஹெட்டில் (Sylhet) நடைபெற்ற பிபிஎல் டி20 2026 தொடரின் டாக்கா கேபிடல்ஸ் அணியின் முதல் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஜாகி மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவருக்கு வயது 59.
டிசம்பர் 27 அன்று மதியம் 1:00 மணியளவில் சில்ஹெட்டில் ஜாகி காலமானதை கட்டுப்பாட்டுச்சபை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

“பிசிபி (BCB) விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் வேகப்பந்து வீச்சு நிபுணரும், டாக்கா கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளருமான மஹ்மூத் அலி ஜாகியின் மறைவுக்கு கட்டுப்பாட்டுச்சபை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சு வளர்ச்சிக்காக நீண்டகாலமாக ஆற்றிய பங்களிப்பிற்காக ஜாகி பெரிதும் மதிக்கப்பட்டார். பிசிபியின் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இளம் வீரர்களுடன் அவர் நெருக்கமாகப் பணியாற்றியவர்.
“வங்கதேச கிரிக்கெட்டிற்கு மஹ்மூத் அலி ஜாகி ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்பு மிகுந்த மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூரப்படும்” என்று பிசிபி தெரிவித்துள்ளது. மேலும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் கிரிக்கெட் சமூகத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது வங்கதேச பிரீமியர் லீக் போட்டிகள் சில்ஹெட்டில் நடைபெற்று வருகின்றன, இதில் டாக்கா கேபிடல்ஸ் அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது.