டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்டுள்ள பொருளாதார சேதங்கள் குறித்து அரசாங்கம் தெளிவான மற்றும் நேரடி அறிக்கையை வெளியிட வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) கோரிக்கை விடுத்துள்ளது.
சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர், இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் கருத்துப்படி, நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் உட்பட உலகப் புகழ்பெற்ற 121 பொருளாதார நிபுணர்கள் குழு, ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்களைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி அண்மையில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கூடுதல் கடனைப் பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சூழலில், இலங்கையின் இறையாண்மைக் கடன் திருப்பிச் செலுத்தலை உடனடியாக நிறுத்தி வைக்குமாறும், தற்போதைய நிலைமைகளின் கீழ் நீண்டகால கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஆரம்பிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ, சர்வதேச நிபுணர்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இலங்கை வரும் காலங்களில் தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் என்று 121 பொருளாதார நிபுணர்களால் வெளியிடப்பட்ட பகிரங்க அறிக்கை தெளிவாக எச்சரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் கடன் செலுத்துவதை நிறுத்தி வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், தற்போதுள்ள கடன் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“நாங்கள் உள்நாட்டில் கூறுவதை ஏற்க அரசாங்கம் தயங்கினால், குறைந்தபட்சம் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளதையாவது கருத்தில் கொள்ள வேண்டும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.