GUARDIAN
“உக்ரைன் மற்றும் காஸா போர்கள் தொடர்ந்து நீடித்து வந்த வேளையில், உலகம் முழுவதும் அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. வன்முறைகளுக்கு மத்தியிலும், மனிதநேயம், விளையாட்டுத் துறையின் மகத்தான சாதனைகள் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகு நிறைந்த தருணங்களும் அரங்கேறின. அந்தப் புகைப்படங்களுக்குப் பின்னால் உள்ள தருணங்கள் குறித்து புகைப்படக் கலைஞர்கள் இங்கே விவரிக்கிறார்கள்
தாய் போ (Tai Po), ஹாங்காங், சீனா – 26 நவம்பர்
ஹொங்கொங்கில் உள்ள ஒரு வீட்டு வசதி குடியிருப்பில் தீ பல கட்டிடங்களுக்கு பரவியபோது, ஒரு நபர் மனவேதனையில் கதறி அழுகிறார். புகைப்படம்: டைரோன் சியு (Tyrone Siu)/ரொய்ட்டர்ஸ்
தாய் போ பகுதியில் உள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த ‘வாங் புக் கோர்ட்’ (Wang Fuk Court) குடியிருப்பு வளாகத்தில் மாலை 3 மணியளவில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. நான் ஒரு மணிநேரம் கழித்து அங்கு சென்றடைந்தேன். அதற்குள், தீ பல கட்டிடத் தொகுதிகளில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததுடன், அடர்த்தியான கரும்புகை சூழ்ந்திருந்தது. பாதுகாப்பற்ற மூங்கில் சாரங்கள் மற்றும் நுரைப்பஞ்சுகள் (Foam) காரணமாக, இதுகடந்த பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக மாறியிருக்கலாம். குடியிருப்பாளர்கள் பீதியுடன் வெளியேறிக் கொண்டிருந்தனர், அதே வேளையில் அவசர கால மீட்புப் படையினர் ஒரு கோபுரத்திலிருந்து அடுத்த கோபுரத்திற்குப் பரவும் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.
அது ஒரு பயங்கரமான கனவு கண்முன்னே விரிவது போல் இருந்தது. பாதுகாப்பு எல்லைக்கு வெளியே, அருகில் வசிக்கும் மக்கள் கூட்டத்தையும், 71 வயதான திரு. வாங் என்ற நபரையும் பார்த்தேன். அவர் அந்தத் தடுப்புக்களுக்கு அருகில் மிகுந்த மனவேதனையுடன் அலைந்து கொண்டிருந்தார். தீப்பிழம்புகளுக்குள் தனது மனைவி சிக்கிக்கொண்டிருப்பதாகக் கூறி, காவல்துறை அதிகாரிகள் அவளை மீட்கக்கூடும் என்ற நம்பிக்கையில் தனது வீட்டின் எண்ணைச் சத்தமாகச் சொல்லி அவர் கதறிய அந்தத் தவிப்பை இந்தப் புகைப்படம் படம்பிடித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோதுதான் அவர் கடைசியாகத் தனது மனைவியுடன் தொலைபேசியில் பேசியிருந்தார்.

அதற்கடுத்த நாட்களில், என்னால் திரு. வாங் மற்றும் அவரது மனைவியைப் பற்றிய சிந்தனையை நிறுத்த முடியவில்லை. ஏதேனும் நல்ல செய்தி வருமா என்று நான் தேடிக்கொண்டிருந்தேன். தீ விபத்து நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, மீண்டும் அதே இடத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, சாலையின் மறுபுறம் அவரைப் பார்த்தேன். என்னைப் புகைப்படக் கலைஞர் என்று அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனது புகைப்படத்தை எல்லா இடங்களிலும் பார்த்ததாகக் கூறிய அவர், பின்னால் இருந்த தனது மகனைக் காண்பித்தார்.
அவரது மகன் கூறிய ஒரு விஷயம் என் மனதை ஆழமாகத் தொட்டது: “எங்கள் வீடு இல்லாமல் போய்விட்டது என்று நான் நினைத்தேன், ஆனால் ‘வீடு’ இன்னும் இங்கேதான் இருக்கிறது.” அவரது தாய் அவர்களை விட்டுப் பிரிந்துவிட்டார், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சாம்பலாகிவிட்டது, ஆனால் அவரது தந்தை, சகோதரி மற்றும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தனர்.