வானிலை ஆய்வுத் திணைக்களம் இன்று (ஜனவரி 9) மாலை 4:30 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் குறித்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, 2026 ஜனவரி 9 ஆம் திகதி பிற்பகல் 3:30 மணி நிலவரப்படி மட்டக்களப்பிற்கு கிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நாளை (ஜனவரி 10) பிற்பகலில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கரையை கடக்கக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இது குறித்துக் கூறுகையில், “இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வுப் பாதை மாற்றமடைந்துள்ளதுடன், தற்போது அது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்றது” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை 5:30 மணி முதல் இரவு 11:00 மணிக்குள் இலங்கையில் கரையை கடக்கும் என முன்னதாகக் கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த வானிலை மண்டலத்தின் நகர்வு வேகம் குறைவடைந்துள்ளதால், அதன் நகர்வுப் பாதை மற்றும் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கரையை கடக்கும் நேரம் தாமதமடைந்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.