முன்கூட்டியே இராணுவ தாக்குதல்களை நடத்தும் திட்டம் தெஹ்ரானிடம் இல்லை என்றும், ஆனால் தாக்கப்பட்டால் போரை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக, ஈரானில் அமெரிக்கா தலையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார். ஈரானிய பாதுகாப்புப் படையினரால் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக வெளியான அறிக்கைகளைத் தொடர்ந்து, ” இராணுவம் இதை கவனித்து வருகிறது, மிகவும் கடுமையான சில விருப்பத் தெரிவுகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் தெஹ்ரானில் உள்ள வெளிநாட்டுத் தூதர்களிடம் பேசிய அப்பாஸ் அராக்ஷி (Abbas Araghchi), இஸ்லாமிய குடியரசு “போரை விரும்பவில்லை” என்று கூறினார். அதேவேளையில், எதிரிகள் எவ்விதமான “தவறான கணக்கீடுகளையும்” செய்ய வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் மோதலின் போது இருந்ததை விட, தற்போது ஈரான் “இன்னும் கூடுதல் தயார் நிலையில்” இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரானில் நிலவி வரும் அமைதியற்ற சூழலுக்கு மத்தியில் தொடர்ந்து அமலில் உள்ள “கட்டுப்பாடுகள்” குறித்தும் அராக்ஷி கருத்து தெரிவித்தார். இது நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக நீடிக்கும் முழுமையான இணைய முடக்கம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிப்பைக் குறிப்பதாகத் தெரிகிறது. “அச்சுறுத்தல்கள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்தும் வரை இவை தொடரும்” என்று அவர் கூறினார்.
மேலும், சமீபத்திய கிளர்ச்சிகள் போராட்டங்களிலிருந்து “பயங்கரவாத நடவடிக்கைகளாக” மாறியுள்ளதாக அவர் விவரித்தார். இது கடந்த வாரம் ஈரானிய ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் முன்வைத்த அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
ஈரான் இன்னும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவை “நியாயமான, கண்ணியமான மற்றும் சமமான” நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜூன் மாத மோதலுக்குப் பிறகு வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து தெஹ்ரான் கொண்டுள்ள அதே நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
