டிட்வா சூறாவளியினால் முதியவர்கள் மாற்றுதிறனாளிகள் பெண் தலைமைத்து குடும்பங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு;ள்ளன என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் அபிவிருத்தி திட்டம் இந்த மக்கள் வறுமையின் பிடியில் சிக்காமலிருப்பதை உறுதி செய்வது அவசியம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வீதிகள் மற்றும் ஏனைய முக்கிய உட்கட்டமைப்பு வசதிகள் கிட்டத்தட்ட அனைத்து சமூகங்களிலும் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) புதன்கிழமை வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்கான தேவையின் அளவு மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அவசரமாக நிதி உதவி கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை மேலும் வலியுறுத்துகிறது.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் உள்ள 85 பிரதேச செயலகப் பிரிவுகளில், 510 உள்ளூர் அதிகாரிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையிலான இந்த தரப்பாய்வு அறிக்கை, 95% பதிலளித்தவர்கள் தங்கள் பகுதியில் குடியிருப்பு, போக்குவரத்து, கைத்தொழில் அல்லது சமூக உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது. இதில் வீடுகளும் வீதிகளுமே அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்ட சேதங்களாகும்.

‘டிட்வா’ சூறாவளி 2025 நவம்பர் 26 அன்று இலங்கையைத் தாக்கியது. இது 2004 சுனாமிக்கு பின்னர் நாட்டின் மிக மோசமான அனர்த்தமாகக் கருதப்படுகிறது. 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஆரம்பகட்ட UNDP புவிசார் பகுப்பாய்வின்படி, நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 20% வெள்ளத்தில் மூழ்கியதாகவும், சுமார் 2.3 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பகுப்பாய்வின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தற்போதைய மதிப்பீடு, மீட்புத் தேவைகள் ஆழமாகவும் பரவலாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பல சமூகங்களுக்கு மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பொருட்கள், உழைப்பு மற்றும் நிதி வசதிகள் இல்லையென்பதை இது காட்டுகிறது.
“குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) 3% சலுகை வட்டி கடன் திட்டம் உட்பட 95 பில்லியன் ரூபா ஆதரவை வழங்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இது மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாகும். அதேவேளை, முறைசாரா அமைப்புகளுக்கு வெளியே இயங்கும் — பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் உள்ளூர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் — பலருக்கு ஆதரவளிப்பதில் நாம் முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்,” என்று இலங்கையின் UNDP வதிவிடப் பிரதிநிதி அஸூஸா குபோடா தெரிவித்தார்.
“குறுகிய கால மனிதாபிமான உதவிகளுக்கு அப்பால், விரிவான ஆரம்பகால மீட்பு மற்றும் மீளெழும் திறன் கொண்ட ஒரு அணுகுமுறையை நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த ‘RAPIDA’ மதிப்பீடு வலியுறுத்துகிறது. பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீண்டும் வறுமையில் வீழ்ந்து, அந்த சுழற்சியில் சிக்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய இது இன்றியமையாதது. உள்ளூர் பொருளாதாரங்களை வலுப்படுத்தும் மீட்பு முயற்சிகளில் முதலீடு செய்வது — முறைசாரா துறைக்கான இலக்கு வைக்கப்பட்ட ஆதரவு உட்பட — அனைவருக்கும் நிலையான வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
UNDP இன் மதிப்பீடு பரவலான பொருளாதார வீழ்ச்சியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 93% பதிலளித்தவர்கள் தங்கள் பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். பயிர் மற்றும் கால்நடை இழப்புகள், வேலை இழப்புகள் மற்றும் முறைசாரா துறையிலுள்ள வணிகங்கள் மூடப்பட்டமை போன்றவை இதில் அடங்கும். இலங்கையின் உழைக்கும் சக்தியில் பெரும் பகுதியினர் முறைசாரா துறையிலேயே பணியாற்றுகின்றனர். சிறு தொழில்களுக்கான ஆதரவு, குறைந்த வட்டி கடன் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் இருப்புகளை (stocks) மீண்டும் கட்டியெழுப்ப சிறு வணிகங்களுக்குத் தேவையான மூலதனம் ஆகியவையே முக்கிய மீட்புத் தேவைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேர்காணல் செய்யப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் உதவி அல்லது ஆதரவு (76% பதிலளித்தவர்கள்), சர்வதேச நிறுவனங்களின் உதவி (45%) மற்றும் முறைசாரா கடன் பெறுதல் (40%) போன்றவை மக்களால் கையாளப்பட்ட பொதுவான சமாளிப்பு முறைகளாக இருந்தன. இத்தகைய போக்குகள் குடும்பங்களின் கடன் சுமையை அதிகரிப்பதோடு, வீடுகளின் நல்வாழ்வு மற்றும் சிறு நிறுவனங்களின் மீட்பு வேகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை, திறமையான தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை தடைகளாக இருப்பதாக பதிலளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அனுமதிகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான பலவீனமான ஒருங்கிணைப்பு ஆகியவை மீட்பு முயற்சிகளை மெதுவாக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களும் கூடுதல் கவலைகளாக உருவெடுத்துள்ளன. நீர் மாசுபடுதல், மண் அரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் நீண்டகால காலநிலை மற்றும் பொது சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்காசியாவின் ஏனைய நாடுகளைப் போலவே, இலங்கையும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய வெள்ளம், சூறாவளி மற்றும் நீண்டகால வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு உள்ளாகி வருகின்றது.
அவசரகால நிவாரணத்திலிருந்து மீட்பு மற்றும் புனரமைப்புக்கு நாடு மாறும் வேளையில், உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை — குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு — மீட்டெடுப்பதற்கான தொடர்ச்சியான ஆதரவின் அவசியத்தை இந்த கண்டுபிடிப்புகள் வலியுறுத்துவதாக UNDP தெரிவித்துள்ளது.
