அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகளும், எழுத்தாளரும், உளவியலாளருமான மேரி ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஐரோப்பா “திருப்பித் தாக்க” (Fight back) வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“ட்ரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஐரோப்பிய அதிகாரிகள் பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை நடத்தவே விரும்புகிறார்கள்” என்ற நியூயார்க் டைம்ஸின் தலைப்புச் செய்தியை மேற்கோள் காட்டி தனது X (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ள மேரி டிரம்புடன்பேச்சுவார்த்தை நடத்த முயலும் நபர்களைக் கண்டு தான் மிகுந்த சலிப்படைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
“பேச்சுவார்த்தை மற்றும் சமாதானப்படுத்தும் தோல்வியுற்ற உத்திகளைக் கண்டு நான் மிகுந்த சலிப்படைந்துவிட்டேன். இது அவரை (ட்ரம்ப்பை) இன்னும் வலிமைப்படுத்தவே செய்யும். திருப்பித் தாக்குங்கள்!”
“I am so f**king tired of the failed strategy of negotiation and appeasement. It only empowers him. Fight back!
பின்னணி: கிரீன்லாந்தைக் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட 8 நாடுகள் மீது 10% முதல் 25% வரை இறக்குமதி வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் வர்த்தகப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேரி ட்ரம்ப்பின் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.