சமீபத்திய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்கீழ் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி, 2025 டிசம்பர் 5-ஆம் தேதியிட்ட வரவுசெலவுத் திட்டச் சுற்றறிக்கை (இலக்கம் 08/2025) மற்றும் அதனுடன் தொடர்புடைய திருத்தப்பட்ட சுற்றறிக்கைகளின் கீழ் இந்த நிவாரணத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். பேரிடரால் முடங்கியுள்ள வணிகங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் மறுவாழ்வு மானியம் (Rehabilitation Grant) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
-
தொழில்துறை அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வணிகங்கள்: ஒரு நிறுவனத்திற்கு ரூ. 200,000 (பிரதேச செயலாளரின் சான்றிதழுக்கு உட்பட்டது).
-
பிரதேச செயலகங்களில் பதிவுசெய்யப்பட்ட சிறு வணிகங்கள் மற்றும் பதிவு செய்யப்படாத நிரந்தர வீட்டு வணிகங்கள்: ஒரு நிறுவனத்திற்கு ரூ. 200,000.
-
கட்டிடங்களில் இயங்கும் வர்த்தக நிலையங்கள்: ஒரு நிறுவனத்திற்கு ரூ. 50,000.
-
பதிவு செய்யப்படாத உற்பத்தித் தொழில்கள் மற்றும் பசுமை இல்லங்கள் (Greenhouses): ஒரு நிறுவனத்திற்கு ரூ. 50,000.
-
நடைபாதை வியாபாரிகள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் உள்ளிட்ட தற்காலிக வணிகங்கள்: ஒருவருக்கு ரூ. 25,000.
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வணிக உரிமையாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை திறம்பட மீண்டும் கட்டியெழுப்பவும் இந்த நிவாரணப் பொதி உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
