இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கையின் 19 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியின் பின்னர், ‘ஆட்டநாயகன்’ விருதை வென்ற இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகே, அந்த விருதை தனது மறைந்த தந்தைக்கு சமர்ப்பித்து உருக்கமான அஞ்சலியை செலுத்தினார்.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெல்லாலகே, பந்துவீச்சில் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், துடுப்பாட்டத்தில் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் இலங்கை அணி 271 ஓட்டங்களைப் பாதுகாத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற உதவியது.
தான் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த காலப்பகுதியில் காலமான தனது தந்தைக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாக வெல்லாலகே தெரிவித்தார்.
“இந்த விருதை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் எங்கிருந்தோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். நான் நாட்டுக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் எப்போதும் விரும்புவார், எனக்கு ஆதரவாகவும் இருந்தார்,” என்று போட்டிக்குப் பிந்தைய ஊடகவியலாளர் சந்திப்பில் வெல்லாலகே கூறினார்.
கடந்த சில மாதங்கள் தனிப்பட்ட முறையில் தமக்கு மிகவும் கடினமான காலமாக அமைந்ததாகக் குறிப்பிட்ட 23 வயதான வெல்லாலகே, அந்த நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சசித் பத்திரணவுக்கு நன்றி தெரிவித்தார்.
தனது துடுப்பாட்ட முன்னேற்றம் குறித்துப் பேசிய அவர், ஆர். பிரேமதாச மைதானத்தில் உள்ள உயர் செயல்திறன் மையத்தில் (HPC) தம்மிக்க சுதர்சன மற்றும் தாமர அபேரத்ன ஆகியோருடன் இணைந்து கடுமையாகப் பயிற்சி பெற்றதாகக் கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த வெல்லாலகே, மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டு இந்த வெற்றிகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2026 ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக்கிண்ணம் நெருங்கி வரும் நிலையில், உள்நாட்டு ஆடுகளங்களில் அவரது இடது கை சுழற்பந்து வீச்சு மற்றும் கீழ் வரிசை துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.