‘டிட்வா’ (Ditva) சூறாவளியினால் இடம்பெயர்ந்து, தற்போது இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள “சுரக்ஷா” முகாம்களில் தங்கியுள்ள குடியிருப்பாளர்களுக்கு, இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் நகரைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
சன்ரைஸ் மருத்துவமனை குழுமத்தைச் (Sunrise Hospital Group) சேர்ந்த ஐந்து நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய இக்குழுவினர், நேற்று (23) மாலை 4:15 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தனர்.
சென்னையிலிருந்து ‘இண்டிகோ’ (IndiGo) 6E-1179 விமானம் மூலம் வருகை தந்த அவர்கள், அங்கிருந்து நேரடியாக பதுளைக்குச் சென்று தமது மனிதாபிமானப் பணியைத் தொடங்கினர்.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த மருத்துவ விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நிபுணர்களால் நடத்தப்படும் இந்த மருத்துவ முகாம்கள் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கொழும்பு லங்கா வைத்தியசாலையின் மருத்துவர்கள் உட்பட மேலும் 25 மருத்துவப் பணியாளர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்துப் பொருட்கள் மற்றும் நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து மருத்துவச் செலவுகளையும் இந்தியாவின் சன்ரைஸ் மருத்துவமனை குழுமமே முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. சூறாவளியால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான மருத்துவ நிவாரணங்களை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்
