cricinfo
1. 1996 ஒருநாள் உலகக் கோப்பை: இலங்கை செல்ல மறுத்த ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்

1996 உலகக் கோப்பைக்கு முன்னதாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தது. தொடர் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பு பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்தது.
இலங்கைக்கு ஆதரவாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களைக் கொண்ட ஒரு கூட்டு அணி, தொடர் தொடங்குவதற்கு முன்பு கொழும்பில் ஒரு நட்பு போட்டியில் விளையாடியது. இருப்பினும், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் கொழும்பு செல்ல மறுத்துவிட்டன. இதனால் அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டன (Forfeit). இறுதியில் லாகூரில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது.
2. 2003 ஒருநாள் உலகக் கோப்பை: ஜிம்பாப்வேயைத் தவிர்த்த இங்கிலாந்து; கென்யாவைத் தவிர்த்த நியூசிலாந்து
ஆப்பிரிக்காவில் முதல்முறையாக நடந்த இந்த உலகக் கோப்பையில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. ஜிம்பாப்வேயின் ராபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த நிலைப்பாடு காரணமாக, ஹராரேயில் விளையாட இங்கிலாந்து மறுத்தது. அதேபோல், மொம்பாசாவில் நடந்த குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு அச்சத்தினால் கென்யாவின் நைரோபிக்குச் செல்ல நியூசிலாந்து மறுத்தது.
போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐசிசி மறுத்துவிட்டதால், ஜிம்பாப்வே மற்றும் கென்யாவிற்கு வெற்றி புள்ளிகள் வழங்கப்பட்டன. இங்கிலாந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது, ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய கென்யா அரையிறுதி வரை முன்னேறியது.
3. 2009 டி20 உலகக் கோப்பை: விலகிய ஜிம்பாப்வே
முகாபே தலைமையிலான ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து இடையிலான உறவு சீரடையாததால், ஜிம்பாப்வே வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில், விளையாட்டின் நலன் கருதி தாங்களாகவே இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக ஜிம்பாப்வே அறிவித்தது. அவர்களுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி விளையாடியது.
4. 2016 19-வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா விலகல்
பாதுகாப்பு காரணங்களைக் கூறி 2015 இல் வங்காளதேசத்துடனான இருதரப்பு தொடரிலிருந்து ஆஸ்திரேலியா விலகியது. அதே நிலைப்பாடு 2016 ஜூனியர் உலகக் கோப்பையிலும் தொடர்ந்தது. வங்காளதேசத்தில் ஆஸ்திரேலியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவர்கள் விலகினர். அவர்களுக்குப் பதிலாக அயர்லாந்து அணி விளையாடியது.
5. 2025-பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்தியா

29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடக்கும் முதல் ஐசிசி தொடராக இது அமைந்தது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா அங்கு செல்ல மறுத்தது. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு சமரசத் தீர்வு எட்டப்பட்டது: 2024-2027 சுழற்சியில் இந்தியா அல்லது பாகிஸ்தான் நடத்தும் ஐசிசி தொடர்களில், இவ்விரு நாடுகளும் மோதும் போட்டிகள் ஒரு பொதுவான இடத்தில் (Neutral Venue) நடத்தப்படும் என முடிவானது. இதன்படி, இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டன, இறுதியில் இந்தியா அந்தத் தொடரை வென்றது.