ஜனவரி 29, 2026
கட்டாய சர்வதேச விமான போக்குவரத்து பாதுகாப்பு தரநிலைகளை மேற்கோள் காட்டி, பௌத்த மதகுரு ஒருவருக்கு விமான நிலைய அனுமதி அட்டை (Airport Pass) வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, இலங்கை விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் (AASL) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற எயார் சீஃப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம விலகியுள்ளார்.
ஜப்பானின் பிரதம சங்கநாயக்கரான மெதகொட பனகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் சார்பாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 2026 ஜனவரி 9 தேதியிட்ட கடிதத்தில் இதற்கு பதிலளித்திருந்த அபேவிக்ரம, விமான நிலைய வளாகம், குறிப்பாக தடைசெய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான அணுகல் என்பது சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் (ICAO) கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் நிர்வகிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
அக்கடிதத்தில் அவர் விளக்கியுள்ளதாவது:
-
விமான நிலைய ஊழியர்கள் மற்றும் உத்தியோகபூர்வ பணிகளைச் செய்ய வேண்டிய பணியாளர்களுக்கு மட்டுமே நிரந்தர அனுமதி அட்டைகள் வழங்க தகுதியுண்டு.
-
இந்த வகைக்கு வெளியே உள்ள நபர்களுக்கு இத்தகைய அனுமதிகளை வழங்க முடியாது.
-
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நுழைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். அப்போது நடைமுறைகளின்படி அது பரிசீலிக்கப்படும்.
சர்வதேச விமான நிலையங்கள் ICAO பாதுகாப்பு பரிந்துரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், ஏதேனும் விதிமீறல்கள் அல்லது விலகல்கள் ஏற்பட்டால் விமான நிலையத்தின் தரம் குறைக்கப்படலாம் (Downgraded) என்றும் அவர் எச்சரித்திருந்தார். இது சர்வதேச நம்பிக்கை, விமான செயல்பாடுகள் மற்றும் உலகளாவிய தொடர்புகளை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், இதற்கு முன்னர் சர்வதேச தரத்திற்கு மாறான சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும், தற்போதுள்ள நிர்வாகம் அவற்றைச் சீர்செய்து அரச அமைப்பிற்குள் இணக்கப்பாட்டை உறுதிப்படுத்த முயற்சிப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்கவிற்கும் இந்தக் கடிதத்தின் பிரதி அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும், அமைச்சரினால் அந்த அனுமதி அட்டையை வழங்குமாறு அபேவிக்ரமவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய அனுமதி வழங்குவது ICAO தரநிலைகளை மீறுவதுடன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனக்கூறி அபேவிக்ரம அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த மோதலைத் தொடர்ந்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார், அது தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் முன்னாள் தளபதியான அபேவிக்ரம, விமான போக்குவரத்து துறையில் ஆளுமை, பாதுகாப்பு இணக்கம் மற்றும் நிறுவன ஒழுக்கத்தை வலுப்படுத்தும் நோக்கிலேயே தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் அரசியல் தலையீடுகள் குறித்தும், விதிவிலக்கின்றி சர்வதேச தரத்தைப் பேண வேண்டிய அவசியம் குறித்தும் விமான போக்குவரத்து நிபுணர்களிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.
