சுருக்கம்:
-
ஈரானியப் பாதுகாப்புப் படைகள் மற்றும் தலைவர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவது ட்ரம்ப்பின் ஆலோசனையில் உள்ளது.
-
எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து ட்ரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
-
ஈரான் இராணுவ மோதலுக்குத் தயாராகி வருவதோடு, இராஜதந்திர வழிகளையும் நாடுகிறது.
-
வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே ஈரானிய ஆட்சியை வீழ்த்தாது என இஸ்ரேலிய, அரபு அதிகாரிகள் ஐயம் தெரிவிக்கின்றனர்.

துபாய் (ரொய்ட்டர்ஸ்) – ஈரானியப் போராட்டக்காரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், அந்நாட்டுப் பாதுகாப்புப் படைகள் மற்றும் தலைவர்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்துவது உட்பட பல்வேறு தெரிவுகளை அமெரிக்க
ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார். இருப்பினும், வான்வழித் தாக்குதல் மட்டுமே அங்குள்ள மதகுருமார்களின் ஆட்சியை வீழ்த்தப் போதுமானதாக இருக்காது என்று இஸ்ரேலிய மற்றும் அரபு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலோசனைகள் குறித்து அறிந்த இரு அமெரிக்கவிடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில் இம்மாத தொடக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று ஒடுக்கப்பட்ட நாடு தழுவிய போராட்டத்திற்குப் பிறகு, அங்கு “ஆட்சி மாற்றத்திற்கான” சூழலை உருவாக்க ட்ரம்ப் விரும்புவதாகத் தெரிவித்தன..
இதற்காக, வன்முறைக்குக் காரணமான தளபதிகள் மற்றும் நிறுவனங்களைத் தாக்கி, அரசாங்கக் கட்டிடங்களையும் பாதுகாப்புத் தளங்களையும் தங்களால் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையைப் போராட்டக்காரர்களுக்கு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகளின் ஆலோசனையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளைத் தாக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அல்லது அணுசக்தி செறிவூட்டல் திட்டங்கள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்துவதும் ஒரு தெரிவாக உள்ளது. இருப்பினும், இராணுவப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்பது குறித்து ட்ரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இந்த வாரம் வளைகுடா பகுதிக்கு அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் வந்திருப்பது, ட்ரம்ப்பின் இராணுவத் திறனை அதிகரித்துள்ளது. ஆனால், இத்தகைய தாக்குதல்கள் போராட்டக்காரர்களை வீதிக்குக் கொண்டு வருவதற்குப் பதிலாக, ஏற்கனவே ஒடுக்குமுறையால் அதிர்ச்சியில் இருக்கும் இயக்கத்தை மேலும் பலவீனப்படுத்திவிடும் என்று அரபு மற்றும் மேற்கத்திய இராஜதந்திரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப், அணு ஆயுதங்கள் குறித்து ஒப்பந்தம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். அடுத்த தாக்குதல் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை விட மோசமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஈரானிய அதிகாரிகள் கூறுகையில், தாங்கள் இராணுவ மோதலுக்குத் தயாராகி வருவதாகவும், அதே சமயம் இராஜதந்திர வழிகளைப் பயன்படுத்த முயல்வதாகவும் தெரிவித்தனர்.
வான்வழி வலிமையின் எல்லைகள்: இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே ஈரானிய ஆட்சியை வீழ்த்தாது என்றார். “ஆட்சியை வீழ்த்த வேண்டுமானால், தரைவழிப் படைகளை (Boots on the ground) இறக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு அழுத்தமும், ஒழுங்கமைக்கப்பட்ட உள்நாட்டு எதிர்க்கட்சியும் இணைந்தால் மட்டுமே ஈரானின் அரசியல் பாதையை மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.
தற்போது 86 வயதாகும் உச்ச தலைவர் கமேனி அன்றாட நிர்வாகத்திலிருந்து விலகிப் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக நம்பப்படுகிறது. அன்றாட நிர்வாகம் இப்போது புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய நபர்களால் கையாளப்படுகிறது. இருப்பினும், போர் மற்றும் அணுசக்தி குறித்த இறுதி அதிகாரம் இன்னமும் கமேனியிடமே உள்ளது.

பிராந்தியப் பாதிப்புகள்: அமெரிக்காவின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள், ஈரானின் பதிலடித் தாக்குதல்களுக்குத் தங்களே முதல் இலக்காவோம் என்று அஞ்சுகின்றன. சவுதி அரேபியா, கத்தார், ஓமான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளன. “அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கலாம், ஆனால் அதன் விளைவுகளை அனுபவிக்கப் போவது நாங்கள்தான்” என்று ஒரு அரபு அதிகாரி தெரிவித்தார்.
ஈரான் பிளவுபட்டால் அது உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என்றும், அது அகதிகள் வெளியேற்றம், பயங்கரவாதம் மற்றும் ‘ஹார்முஸ்’ நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் விநியோகத் தடையை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.