இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இலங்கை கனிம எண்ணெய் சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) ஆகியவற்றில் நிலவும் வேலை வாய்ப்புகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், எந்தவொரு அரசியல் அல்லது அதிகார மட்டத்திலிருந்தும் இதற்காக எவ்வித அழுத்தங்களும் இருக்காது என்பதாகும்.
நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்கள், ஏதேனும் தனிப்பட்ட அறிமுகத்தின் (சிபாரிசு) அடிப்படையில் வந்துள்ளதாகத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நபர் அந்த வேலையைப் பெறுவதற்கு தகுதியற்றவராவார்.
அதேபோல், வேலை வழங்குவதற்காக அல்லது வேலையைப் பெறுவதற்காகப் பணப் பரிமாற்றம் இடம்பெற்றிருந்தால், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனத் தலைவர் டி. ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.
தகைமைகளின் அடிப்படையில் நாட்டின் எந்தவொரு நபரும் எவ்வித அழுத்தமுமின்றி இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு முன்னர் இவ்வாறான வெற்றிடங்கள் ஏற்படும் போதெல்லாம், உயர் அதிகாரிகள் அல்லது அரசியல் தலையீடுகள் மூலம் தமக்கு நெருக்கமானவர்கள் நியமிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், லஞ்சமாகப் பெருமளவு பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகச் சில தரப்பினர் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய தலைவர், இனிமேல் அவ்வாறு நடக்காது எனவும் தகுதியுள்ள எவரும் விண்ணப்பித்து வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
