உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டு விலையைக் கட்டுப்படுத்துவதற்காக தங்க இறக்குமதி மீதான வரிகளைக் குறைக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், தற்போதைய வரி முறையானது உள்நாட்டு சந்தைக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
“அதிகப்படியான வரிகள் இலங்கையில் தங்கத்தின் விலையை உயர்த்தியுள்ளன. பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) உட்பட மொத்த வரி 47 சதவீதமாக உள்ளது. இது இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும்,” என்று கருணாநாயக்க கூறினார்.
அண்டை நாடுகளின் கொள்கைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்: “இந்தியாவில் தங்கத்தின் மீதான வரி விகிதம் முன்னர் அதிகமாக இருந்தபோதிலும், தொழிலதிபர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் அண்மையில் அதனை 6 சதவீதமாகக் குறைத்தது. இலங்கையும் அதனைப் பின்பற்ற வேண்டும்,” என வலியுறுத்தினார்.
மத்திய வங்கியின் கூற்றுப்படி, கடந்த வாரம் 24 கரட் தங்கத்தின் விலை 400,000 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை அந்த விலையை 405,000 ரூபாவாகப் பதிவு செய்துள்ளது.
மேலதிகமாக, வீடமைப்புச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சிமெந்து போன்ற கட்டுமானப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். “பிராந்தியத்தில் வீடுகளின் விலை மிக அதிகமாக உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.