https://www.telegraph.co.uk/

இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தில் 24,000 வீராங்கனைகளைக் கொண்டிருந்த பெண்கள் பாதுகாப்புப் படைகள் (YPJ), குர்திஷ் தலைவர்களுக்கும் சிரியஜனாதிபதி அஹ்மது அல்-ஷாராவின் ஆதரவுப் படைகளுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், தொடர்ந்து போராடுவோம் என்று சபதம் செய்துள்ளது.
YPJ அமைப்பின் இந்தப் போராட்டம் வெறும் நிலப்பரப்பிற்கானது மட்டுமல்ல, இது குர்திஷ் தன்னாட்சி மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான ஒரு பரந்த போர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குர்திஷ் தன்னாட்சிப் பகுதியின் தலைநகராகக் கருதப்படும் காமிஷ்லியில் (Qamishli), YPJ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ருக்ஸன் முகமது ‘த டெலிகிராப்’ (The Telegraph) செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்: “ஒரு பெண்ணாக நான் ஏன் ஆயுதத்தை கையில் எடுத்தேன்?””ஏனென்றால் எனது சமூகம், எனது தன்னாட்சி மற்றும் எனது அடையாளம் ஆகியவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதை நான் காண்கிறேன். எனக்கு தந்தை மற்றும் சகோதரர்கள் இருக்கலாம், ஆனால் என்னைப் பாதுகாக்க வேண்டியது நானே. வேறு யாராலும் எனக்காக அதைச் செய்ய முடியாது,” என்று அவர் கூறினார்.
குர்திஷ் மொழியில் Yekîneyên Parastina Jin என்று அழைக்கப்படும் YPJ, இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் ஆதரவு பெற்ற குர்திஷ் தலைமையிலான இராணுவக் கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்தது.
சுமார் நான்கு மில்லியன் மக்கள் வசிக்கும் அங்கீகரிக்கப்படாத அரசியல் நிர்வாகத்தை நிறுவுவதற்காக, முன்னாள் IS பயங்கரவாதிகளின் நிலப்பரப்பைக் குர்திஷ் படைகள் கைப்பற்றியபோது, அதில் இப்பெண் போராளிகள் முக்கியப் பங்காற்றினர்.
ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, புதிய சிரிய அரசாங்கம் நடத்திய அழிவுகரமான தாக்குதலால் குர்திஷ் படைகள் தங்களது 80 சதவீத நிலப்பரப்பை இழந்துள்ளன. இதனால் அவர்கள் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கும், தங்களுக்குச் சாதகமற்ற அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும் ருக்ஸன் முகமது கூறுகையில்: “இது போராக இருந்தால், எங்கள் மக்களைப் பாதுகாக்கவும் போரிடவும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஒருவேளை இது அமைதியாக இருந்து, இந்த ஒப்பந்தம் எங்களது மற்றும் எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்குமானால், அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்றார்.
முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின்படி, குர்திஷ் பிரிவுகள் ஒரு குறிப்பிட்ட அளவு தன்னாட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தை டமாஸ்கஸ் (அரசு) மற்றும் குர்திஷ் தலைவர்கள் வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொள்கின்றனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தில் YPJ பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் குர்திஷ் பிரிவுகளுக்குள் ஒரு தன்னாட்சி ஆயுதக் குழுவாகத் தங்களது படை தொடரும் என்று முகமது கூறினார்.
சிரியஜனாதிபதி அல்-ஷாரா முதலில் அல்-கொய்தாவின் கிளை அமைப்பான ஜபத் அல்-நுஸ்ராவின் தலைவராக சிரியாவிற்குள் நுழைந்து, 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் தொடக்கத்தில் YPJ உடன் மோதியவர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இஸ்லாமிய அரசுக்கு எதிரான போர் மற்றும் அல்-நுஸ்ராவிற்கு எதிரான போர் என அனைத்து முன்னணிப் போர்களிலும் எங்கள் தளபதிகளும் வீரர்களும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர். எனவே பெண்கள் இல்லாத ஒரு ஆயுதப் படையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அவர் கூறினார்.
நேர்மாறாக, அல்-ஷாராவின் அரசாங்கம் இராணுவம், பொதுவாழ்வு மற்றும் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை சித்தாந்த ரீதியாக எதிர்க்கிறது. குர்திஷ் இனத்தவர்கள் டமாஸ்கஸின் மத்திய ஆயுதப் படையில் தனிநபர்களாகச் சேருவார்கள் என்றே அந்த அரசு எதிர்பார்க்கிறது.
திங்கட்கிழமை அன்று சிரிய அரசுப் பணியாளர்கள் குர்திஷ் தன்னாட்சிப் பகுதிக்குள் நுழைந்தபோது பதற்றமான சூழல் நிலவியது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, அரசாங்க வாகனத் தொடரணியில் இருந்தவர்கள் IS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சைகைகளைக் காட்டினர்.
தற்போதைக்கு, இந்த அனைத்துப் பெண் போராளிக் குழுவினர் அல்-ஷாராவின் படைகளுடன் நிலவும் பதற்றமான சூழலில் முன்னணி நிலைகளைத் தக்கவைத்துள்ளனர்; குர்திஷ் நகரங்களின் தெருக்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர் மற்றும் ஷமிமா பேகம் போன்றவர்கள் தங்கியிருக்கும் தடுப்பு முகாம்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
அமெரிக்கா தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள IS கைதிகளை அண்டை நாடான ஈராக்கிற்கு வான்வழியாகக் கொண்டு சென்று வருகிறது. அமெரிக்கா இப்பகுதியிலிருந்து வெளியேறத் தயாராகி வருவதால், அது அரசாங்கப் படைகளின் அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு வழிவகுக்கும், இது குர்திஷ் தன்னாட்சிப் பகுதியை முற்றிலுமாக அழித்துவிடும்.
“அமெரிக்க தலைமையிலான கூட்டணியுடனான எமது உறவு எப்போதும் தந்திரோபாயமானது (Tactical) மட்டுமே. அவர்கள் எப்போது அல்லது எப்படி வெளியேறுவார்கள் என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை, ஏனென்றால் அவர்கள் இஸ்லாமிய அரசை எதிர்த்துப் போராட மட்டுமே இங்கு வந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்,” என ருக்ஸன் முகமது கூறினார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் நீடித்தாலும் இல்லாவிட்டாலும், தங்களது பெண் போராளிகள் குழுக்கள் கவச வாகனங்கள் மற்றும் கனரக ஆயுதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று அவர் கூறினார்.
குர்திஷ் பெண்களுக்கு அல்-ஷாராவின் படைகள் ஒரு “இருப்புக்கான” (Existential) அச்சுறுத்தல் என்று அவர் விவரித்தார். இப்பெண்கள் ஆயுதப் படைகளை மட்டுமல்லாது, வடக்கு சிரியா முழுவதும் பெண்களுக்கான தனித்துவமான அரசியல் மற்றும் சமூக அமைப்புகளையும் நிறுவியுள்ளனர்.
“அந்தக் குற்றவாளிகள் கொல்லப்பட்ட ஒரு பெண் போராளியின் உடலைக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே வீசும்போது, அவர்கள் பெண்களின் இருப்பின் மீதான தங்களது வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஒரு பெண் போராளியின் தலைமுடியை அவர்கள் வெட்டும்போது, எங்களை பணிய வைக்கவும் எங்களது கௌரவத்தை மீறவும் முயற்சிக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை அன்று அரசுப் படைகள் காமிஷ்லிக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு குர்திஷ் பெண் போராளிகள் தற்போதைக்குத் தங்களது நிலைகளில் நிலைகொண்டுள்ளனர்.
ருக்ஸன் முகமது மேலும் கூறுகையில்: “தாக்குதல்கள் தீவிரமடையலாம், ஆனால் எங்கள் சடலங்களைத் தாண்டித்தான் அவர்களால் எங்கள் நிலத்திற்குள் நுழைய முடியும். நாங்கள் சூழப்பட்டிருக்கிறோம் என்பது உண்மைதான், ஆனால் நாங்கள் அதற்கும் தயாராகவே இருக்கிறோம்,” என்றார்.
—-
