குளிர்ச்சியான காலநிலை, இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு மற்றும் அமைதியான சூழலைத் தேடும் பயணிகளுக்கு ஏற்ற புத்துணர்ச்சியூட்டும் இடமாக இலங்கையின் நுவரெலியாவை, ஆசியாவின் கட்டாயம் பார்க்க வேண்டிய மலைப்பிரதேசங்களில் (Hill Stations) ஒன்றாக டிஜிட்டல் பயணத் தளமான அகோடா அடையாளப்படுத்தியுள்ளது.
ஆசியாவின் அழகான மலைப்பகுதிகளை ஆராய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் அகோடா வெளியிட்டுள்ள புதிய அம்சத்தில், இந்தியாவின் சிம்லா, மலேசியாவின் கேமரன் ஹைலேண்ட்ஸ் மற்றும் வியட்நாமின் சாபா போன்ற புகழ்பெற்ற இடங்களுடன் நுவரெலியாவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் “குட்டி இங்கிலாந்து” (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியா, அதன் பரந்த தேயிலைத் தோட்டங்கள், காலனித்துவ கால கட்டிடக்கலை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் மலைக் காலநிலை ஆகியவற்றால் கொண்டாடப்படுகிறது. இது இலங்கையின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் அழகிய தேயிலை தோட்டங்கள், அமைதியான ஏரிகள், மூடுபனி சூழ்ந்த மலைகள் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட காலனித்துவ கால வசீகரம் ஆகியவை பயணிகளை ஓய்வு மற்றும் வெளிப்புற சாகசங்களுக்கு ஈர்க்கின்றன.

பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து தப்பிக்க விரும்பும் பயணிகளை ஆசியாவிலுள்ள மலைப்பிரதேசங்கள் தொடர்ந்து ஈர்த்து வருவதாக அகோடா குறிப்பிடுகிறது. இந்த இடங்கள் ஆண்டு முழுவதும் இயற்கை அழகு, கலாச்சார அனுபவங்கள் மற்றும் குளிர்ந்த காலநிலையை வழங்குகின்றன.
இது குறித்து அகொடாவின் விநியோகப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆண்ட்ரூ ஸ்மித் கூறுகையில், மலைப்பிரதேசங்கள் பயணிகளுக்கு அமைதியையும் சாகசத்தையும் ஒரே நேரத்தில் வழங்குகின்றன என்றும், கவர்ச்சிகரமான பயணச் சலுகைகள் மூலம் இத்தகைய இடங்களை மக்கள் எளிதாகச் சென்றடைவதை அகோடா நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
