இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது வர்த்தகம், முதலீடு, சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி, பொருளாதார இராஜதந்திரத்தில் (Economic Diplomacy) உறுதியாக நிலைபெற்றுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
‘COYLE இராஜதந்திரிகள் மாலைப்பொழுது 2026’ (COYLE Diplomats’ Evening 2026) நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் இராஜதந்திர தூதரகங்கள் ஏற்றுமதியை மேம்படுத்துதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், சுற்றுலாத்துறைக்கு ஆதரவளித்தல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்குதல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
புதிய வாய்ப்புகளைத் திறக்கவும், உலகளாவிய சந்தைகளை அணுகவும் இராஜதந்திரமும் (Diplomacy) வர்த்தக முயற்சிகளும் (Enterprise) கைகோர்த்துச் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மூலோபாய ரீதியான நன்மைகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், முக்கிய சர்வதேச கப்பல் வழித்தடங்களின் சந்திப்பில் நாடு அமைந்துள்ளதால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வர்த்தகம், தளவாடங்கள் (Logistics) மற்றும் இணைப்பிற்கான ஒரு இயற்கையான மையமாக இலங்கை திகழ்வதாகக் கூறினார்.
இலங்கையின் திறமையான பணியாளர்கள், மேம்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விரிவடைந்து வரும் டிஜிட்டல் திறன் ஆகியவை உற்பத்தித் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், சுற்றுலா மற்றும் தளவாடங்கள் போன்ற முக்கிய துறைகளில் கூட்டாண்மைக்கான வலுவான சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் (Ease of doing business), முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், பருப்பொருளாதார (Macroeconomic) ஸ்திரத்தன்மை மற்றும் நீண்டகால பொருளாதார மீளெழுத்திறனை உறுதிப்படுத்த சர்வதேச பங்காளிகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களுடன் அரசாங்கம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
