REUTERS



அமெரிக்க செனட்டர் ரூபன் காலிகோவின் பணி ஒழுக்கத்தை வடிவமைத்த முதல் வேலைகள், பிரம்மாண்டமான நாடாளுமன்ற கட்டிடங்களுக்குள் அமையவில்லை. தற்போது 44 வயதாகும் காலிகோ, தனது பதின்ம வயதில் சிகாகோ கட்டுமானத் தளங்களில் டிரைவால் (Drywall) சுமப்பவராகவும், தரைகளைத் துடைக்கும் தூய்மைப் பணியாளராகவும், உணவகங்களில் சமையல்காரராகவும், இறைச்சி ஆலையில் தொத்திறைச்சிகளை (Sausages) அடைப்பவராகவும் பணியாற்றினார்.
அதிகாலை விழிப்பு, நெருக்கமான குழுப்பணி மற்றும் கடுமையான வெப்பம் நிறைந்த சமையலறைகள் தனக்கு ஒழுக்கம், குழுப்பணி மற்றும் ஒரு ஊதியத்தை வீட்டிற்குக் கொண்டு செல்வதில் இருக்கும் பெருமை ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்ததாக இந்த அரிசோனா மாநில ஜனநாயகக் கட்சி உறுப்பினர் விவரிக்கிறார்.
நேர்காணலின் முக்கிய பகுதிகள்:
உங்களது முதல் வேலை எது? எனது உறவினர்களுக்கு கட்டுமானத் தளங்களில் உதவியாளராகச் சென்றதே எனது முதல் வேலை. அங்கு டிரைவால் மற்றும் மரக்கட்டைகளைச் சுமந்து செல்வேன். அதற்கு ஒரு நாளைக்கு 20 டொலர்கள் ஊதியமாகக் கிடைத்தது. 14 வயதில், ஒரு நீச்சல் குளத்தில் தூய்மைப் பணியாளராகவும் இருந்தேன். அப்போது ஒரு மணி நேரத்திற்கு 4.25 டொலர்கள் ஊதியமாகப் பெற்றேன்.
அந்த ஆரம்பகால வேலைகளில் நீங்கள் கற்றுக்கொண்ட திறன்கள் இன்று செனட்டராக உங்களுக்கு எப்படி உதவுகின்றன? கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்வதும், ஒரு குழுவின் அங்கமாக இருப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவை கற்றுக்கொடுத்தன. எனது குடும்பத்திற்கு நிதி ரீதியாக உதவ முடிந்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். எனது தாயார் கொலம்பியாவிலிருந்து குடிபெயர்ந்தவர், அவர் ஒரு ஒற்றைத் தாயாக (Single mom) நான்கு குழந்தைகளை வளர்த்தார். மின்சாரக் கட்டணம் போன்ற வீட்டுச் செலவுகளுக்கு எனது ஊதியம் உதவியாக இருந்தது.
உணவக வேலை உங்களை எப்படி அரசியலுக்குத் தயார்படுத்தியது? உணவக வேலை மிகவும் மன அழுத்தம் நிறைந்தது. குறுகிய நேரத்தில் மக்களுடன் தொடர்பு கொண்டு உணவுகளை வழங்க வேண்டும். சமையலறையில் கொதிக்கும் நீர் மற்றும் கடும் வெப்பத்திற்கு மத்தியில் குழுவாகச் செயல்பட வேண்டும். சிலருக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனாலும் நாம் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும். ஒரு நீண்ட நாளுக்குப் பிறகு வேலையை முடிக்கும்போது ஒரு பெரிய சாதனையைச் செய்த திருப்தி கிடைக்கும்.
இறைச்சி ஆலையில் உங்கள் அனுபவம் எப்படியிருந்தது? ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேருவதற்குத் தேவையான 4,000 டொலர்களைச் சேகரிக்க அங்கு வேலை செய்தேன். அங்கு கருப்பு, வெள்ளை, லத்தீன் அமெரிக்கர், போலந்து நாட்டவர் எனப் பலதரப்பட்ட மக்களுடன் வேலை செய்தேன். எங்களுக்கிடையே மொழி, பண்பாடு எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், ‘கௌரவமான ஊதியம் பெற்று அமெரிக்கக் கனவை நனவாக்க வேண்டும்’ என்ற ஒரு நோக்கம் மட்டும் பொதுவாக இருந்தது.
இராணுவ அனுபவம் உங்களை எப்படி வடிவமைத்தது? ஒழுக்கம் (Discipline). ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், அதில் முழு கவனத்தையும் செலுத்தி முடிப்பேன். தேர்தல் பிரச்சாரமாக இருந்தாலும் சரி, ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும் சரி, இராணுவத்தில் கற்ற அதே ஒழுக்கத்தையே இப்போதும் பயன்படுத்துகிறேன்.
இந்த ஆரம்பகால வேலைகள் உங்கள் கொள்கைகளை எப்படிப் பாதிக்கின்றன? ஒருவருடைய ஊதியம் என்பது அவருக்கு கௌரவத்தை வழங்குவதாக இருக்க வேண்டும். 40 மணிநேரம் உழைத்த பிறகும் ஒருவரால் கௌரவமாக வாழ முடியவில்லை என்பது மிகவும் வருத்தமானது. செனட்டராக நான் கோட் சூட் அணிந்து நாற்காலியில் அமர்ந்து பேசுவது, ஒரு தொழிற்சாலையிலோ அல்லது கட்டுமானத் தளத்திலோ ஒரு சாதாரண மனிதன் பார்க்கும் வேலையை விட கடினமானது அல்ல.
உங்களது முன்மாதிரி (Role Model) யார்? எனது தாயார் தான். கடினமான சூழ்நிலைகளிலும் அவர் வேலைக்குச் சென்று எங்களை வளர்த்தார். ஒரு தாய் வேலைக்குச் செல்வதைப் பார்த்து வளரும் பிள்ளைகளுக்கு அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர் எங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
