2011 ஆம் ஆண்டு செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) மீதான விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில், 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலையயத்திற்குள் வைத்து இவ்விரு செயற்பாட்டாளர்களும் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்களிடம் பேசிய முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா, அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தக் கடத்தலில் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் பல ஆதாரங்களை தமது கட்சி சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தொடர்ந்து தவறி வருவதாகவும், அவர் நீதித்துறை நடவடிக்கைகளைத் தவிர்க்க முயல்வதாகவும் டி சில்வா குற்றம் சாட்டினார்.
யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாததற்கான ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த விசாரணையின் போது நீதவான் உத்தரவிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் கோட்டாபய ராஜபக்ச தரப்பில் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலளிக்க மனுதாரர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் சுதந்திரமாக நடமாடுவதையும் காண முடிவதாகக் குறிப்பிட்ட டி சில்வா, யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு மட்டும் பாதுகாப்பு காரணங்களைக் கூறுவது எந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது எனக் கேள்வி எழுப்பினார்.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமான ஊடகவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டதாகவோ கூறப்படும் நிலையில், ராஜபக்ச ஆட்சியின் மீதான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரே வழக்கு லலித்-குகன் வழக்கு மட்டுமே என்றும் அவர் கூறினார்.
நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து சட்ட வழிகளையும் தமது கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும் எனத் தெரிவித்த டி சில்வா, ஜனநாயகம், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்துபவர்கள் இந்த வழக்குக்கு ஆதரவளிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
