கேள்வி: கமிந்து, ஆரம்ப வரிசை வீரர்கள் துடுப்பெடுத்தாட சற்று சிரமப்பட்டதை பார்த்தோம். ஆடுகளத்திற்கு (Pitch) ஏற்ப உங்கள் இன்னிங்ஸை எவ்வாறு மாற்றிக்கொண்டீர்கள்?
கமிந்து மெண்டிஸ்: ஆம், இது ஒரு நல்ல பேட்டிங் பிட்ச் என்று நினைத்தோம், ஆனால் விளையாடுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 3 மற்றும் 4-வது வரிசை வீரர்கள் நல்ல பங்களிப்பை வழங்கினர். குறிப்பாக குசல் மெண்டிஸ் மிகச்சிறப்பாக விளையாடினார். ஒரு நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு அவரது இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது.

கேள்வி: நீங்கள் கடைசி நேரத்தில் தான் அணியில் இணைந்தீர்கள். நீங்கள் மீண்டும் உங்கள் திறமையை நிரூபித்துள்ளீர்கள். கடைசி நிமிடத்தில் அணியில் இணைந்தது மற்றும் இன்றைய ஆட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கமிந்து மெண்டிஸ்: அணியில் இணைவது என்பது எனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று. நாட்டுக்காக விளையாடி வெற்றியைத் தேடித்தருவதே எனது கடமை. இன்று எனக்குக் கிடைத்த வாய்ப்பில் எனது சிறப்பை வெளிப்படுத்தினேன். இந்தத் தொடரில் எமது அணிக்கு இது ஒரு நல்ல தொடக்கம். மஹீஷ், வனிந்து, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண மற்றும் வெல்லாலகே என பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
கேள்வி: பவன் ஆட்டமிழந்த பிறகு துனித் வெல்லாலகே களமிறக்கப்பட்டார். அது என்ன திட்டம்? இடதுகை ஆட்டக்காரர் தேவை என்றால் உங்களை அனுப்பியிருக்கலாமே?
கமிந்து மெண்டிஸ்: போட்டியைத் தொடங்கும் போதே துனித்தை 5-வது வரிசையில் இறக்குவது என்ற திட்டம் எங்களிடம் இருந்தது. அவர் அழுத்தத்தை நன்றாகக் கையாண்டார். அது எனக்குப் பிறகு விளையாடுவதை எளிதாக்கியது. அணியின் முடிவுகளுக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.
கேள்வி: கடந்த காலங்களில் டி20 அணியில் ‘நிலைத்தன்மை’ (Consistency) ஒரு பிரச்சினையாக இருந்தது. இப்போது சொந்த நாட்டில் உலகக்கோப்பை நடப்பதால், இந்த மைதானங்களின் சாதகத்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்?
கமிந்து மெண்டிஸ்: கிரிக்கெட்டில் முந்தைய போட்டிகளின் வெற்றி தோல்விகளை மறந்துவிட்டு, தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். இங்கிலாந்து தொடரை இழந்தாலும், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் உதவியுடன் விரைவாக மீண்டு வந்துள்ளோம். எமது சொந்த நாட்டு மைதானங்கள் என்பதால் இது எங்களுக்குப் பெரிய சாதகம்.
கேள்வி: அயர்லாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் ஆரம்பத்தில் அழுத்தம் இருந்தது. குசல் மெண்டிஸுடனான உங்கள் பார்ட்னர்ஷிப் பற்றி?
கமிந்து மெண்டிஸ்: முதலில் 170 ரன்களுக்கு மேல் எடுக்கலாம் என்று நினைத்தோம், ஆனால் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தது. குசலுடன் இணைந்து ஒரு நிலையான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, ரன்களைச் சேர்ப்பதே எனது திட்டமாக இருந்தது.
கேள்வி: கடந்த மூன்று மாதங்களாக உங்களுக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இங்கிலாந்து தொடரிலும் நீங்கள் முதலில் இல்லை. இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும் உங்களை எப்படி ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள்?
கமிந்து மெண்டிஸ்: எனது கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற சூழ்நிலைகளை நான் பலமுறை சந்தித்துள்ளேன். தேர்வாளர்கள் என்னை எடுப்பதும் எடுக்காததும் எனது வேலையல்ல. நாட்டின் வெற்றிக்காக விளையாடுவதே எனது இலக்கு. என்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி யோசிக்காமல், எனது பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்தினேன்.
கேள்வி: இன்றைய வெற்றியின் பெருமை யாரைச் சாரும்? அடுத்த போட்டிகளுக்கான வியூகம் என்ன?
கமிந்து மெண்டிஸ்: முதலில் துடுப்பாட்ட வீரர்களுக்குப் பெருமை சேரும், குறிப்பாக குசல் மெண்டிஸ். பந்துவீச்சில் மஹீஷ் மற்றும் காயத்துடன் விளையாடிய வனிந்து ஆகியோர் சிறப்பாகச் செய்தனர். அயர்லாந்து அணியும் இன்று மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள், அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
கேள்வி: இந்தப் பிட்ச்கள் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கின்றன. இலங்கையிடம் சிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதால் இது மற்ற அணிகளை விட உங்களுக்குச் சாதகமாக இருக்குமா?
கமிந்து மெண்டிஸ்: இலங்கையில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இதைவிட மோசமான பிட்ச்களில் விளையாடியிருக்கிறோம். சொந்த நாட்டில் விளையாடுவது ஒரு பலம் தான். பிட்ச் எப்படி இருந்தாலும், அந்தச் சூழ்நிலையைச் சரியாகக் கையாள்வதே முக்கியம். ஒரு அணியாக நாங்கள் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.