பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பிரிவின் (EEAS) பிரதிநிதிகள் குழுவை பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது பிரதிநிதிகள் குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பங்காளியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால பங்காண்மையை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அண்மையில் ஏற்பட்ட சூறாவளியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய காலத்திற்குப் பொருத்தமான உதவிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பொருளாதார ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்காக சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்களின் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்துவதற்கும், நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் சீர்திருத்தங்கள் குறித்து பிரதிநிதிகள் குழுவிற்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில் EEAS அமைப்பின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் பவோலா பம்பலோனி (Paola Pampaloni), ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மோரேனோ (Carmen Moreno), ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் மேலதிகச் செயலாளர் சாகரிகா போகாவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.