“‘மக்களுக்கான சேவையை நீங்கள் சிறப்பாகச் செய்தால் அவர்கள் மனதில் நீங்கள் நிச்சயம் இடம்பிடிப்பீர்கள். அவர்கள்தான் உங்களை மதிப்பிடுபவர்கள்”-வடக்கு மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் மத்தியில் வடமாகாண ஆளுநர்

மக்களுக்கான சேவையை நீங்கள் சிறப்பாகச் செய்தால் அவர்கள் மனதில் நீங்கள் நிச்சயம் இடம்பிடிப்பீர்கள். அவர்கள்தான் உங்களை மதிப்பிடுபவர்கள் – கண்காணிப்பவர்கள். உங்களிடம் வந்தால் சேவையை திருப்தியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகும் வகையில் உங்கள் சேவை அமையும் என நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 114 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை (12.02.2026) காலை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆளுநர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது:
கடந்த காலங்களை நாம் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக, ‘ஆட்களுக்கு வேலை’ என்ற அடிப்படையில், கண்மண் தெரியாமல் நியமனங்கள் வழங்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. தேவை இருக்கிறதோ இல்லையோ, அரசியல் காரணங்களுக்காக அரச துறை வீங்க வைக்கப்பட்டது.
ஆனால், இன்று காலம் மாறியிருக்கிறது. அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம், ‘வேலைக்கு ஆட்கள்’ என்ற புதிய, நேர்மையான கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. அதாவது, எங்கு தேவை இருக்கிறதோ, அங்கு மட்டுமே தகுதியானவர்கள் நிரப்பப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டில் நாம் பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் அனுமதியைப் பெற்றுப் பல ஆட்சேர்ப்புக்களை நடத்தியிருந்தோம். ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால், யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட பலர், அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்து வேலையை விட்டுச் சென்றுவிட்டனர். இது மிகவும் தவறான ஒரு செயற்பாடு.
மக்களுக்கு எங்கு தேவைப்பாடு இருக்கின்றதோ, அங்கு சென்றுதான் நீங்கள் பணியாற்ற வேண்டும். ‘மக்களுக்காகத்தான் உங்கள் பணியே தவிர, உங்கள் பணிக்காக மக்கள் இல்லை’ என்பதை ஆணித்தரமாகப் புரிந்துகொள்ளுங்கள்.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களாக இணையும் உங்களுக்கு, அரச சேவையில் மிகப்பிரகாசமான எதிர்காலம் உண்டு. அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குக் கிடைக்காத பல பதவி உயர்வு வாய்ப்புகளும், நிர்வாகத் துறையில் மேல் நோக்கிச் செல்வதற்கான கதவுகளும் உங்களுக்குத் திறந்தே இருக்கின்றன.
‘அரச வேலை கிடைத்துவிட்டது, இனி வாழ்நாள் முழுவதும் ஓய்வாக இருக்கலாம், இறுதியில் ஓய்வூதியம் எடுக்கலாம்’ என்ற மனநிலையுடன் யாராவது இங்கு வந்திருந்தால், அந்த எண்ணத்தை இப்போதே அழித்துவிடுங்கள். இது ஓய்வெடுப்பதற்கான இடமல்ல் இது ஓயாது உழைப்பதற்கான களம்.
நீங்கள் அமரப்போகும் கதிரைக்கு எதிரே, ஒரு சேவையைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமகன் அமரும்போது, ‘அந்தக் கதிரையில் இருப்பது நான்தான்’ என்று ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். ஒரு வேலை தாமதமானால், அல்லது நியாயமான ஒரு சேவை மறுக்கப்பட்டால், உங்களுக்கு எவ்வளவு வலிக்குமோ, அதே வலிதான் உங்களை நாடி வரும் அந்த ஏழைக்கும் இருக்கும். அந்தத் தாமதத்தை, அந்த வலியை ஒருபோதும் நீங்கள் கொடுக்காதீர்கள்.
இன்று பணிக்குச் செல்லும் உங்களிடம் நான் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். எங்கள் மக்களுக்கு உங்களின் சேவையை உச்ச அளவில் வழங்குங்கள். இந்த மக்களின் வரிப்பணத்தில்தான் நமக்குச் சம்பளம் கிடைக்கிறது என்பதை மறவாதீர்கள். ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை வெறும் வார்த்தையாக அல்லாமல், உங்கள் வாழ்க்கையாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்களை நாடி வரும் ஏழைக்கு நீங்கள் வழங்கும் தரமான – விரைவான சேவையால் அந்த முகத்தில் புன்சிரிப்பு வருமானால் அதுவே உச்சமானது. உங்கள் சிறப்பான சேவையால், ‘இந்த அலுவலர் எனக்கு வேண்டும்’ எனத் திணைக்களத் தலைவர்கள் உங்களை விரும்பிக் கேட்கும் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டும்.
உங்களுக்கு உங்கள் சேவையை வினைத்திறனாகச் செய்வதற்குத் தொடர் பயிற்சிகளை நாங்கள் வழங்குவோம். அதைப் பயன்படுத்தி உங்களையும் நீங்கள் வளப்படுத்தி, எங்கள் மக்களுக்குத் தரமான சேவையை வழங்க வேண்டும்.
நாங்கள் வடக்கு மாகாணத்தில் பல ஆயிரக்கணக்கான ஆளணிப் பற்றாக்குறையுடன்தான் இயங்கி வருகின்றோம். ஆளணி பற்றாக்குறை இருக்கத்தக்கதாகவே எமது மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதமும் திரும்பி விடாமல் சிறப்பாகச் செயற்பட்டிருக்கின்றோம். இங்கிருக்கின்ற பணியாளர்களின் அர்ப்பணிப்பாலேயே அது சாத்தியமானது. பொதுச் சேவைக்கு இணைந்துள்ள நீங்கள் மக்களுக்காகக் கடமையாற்ற நேரம் காலம் பார்க்கக் கூடாது.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தரம் III இற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கு அமைவாக 7,510 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அவர்களில் தகுதியான 5,500 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 125 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் தகுதிபெற்ற 114 பேருக்கு இன்றைய தினம் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல