கொழும்பு நகரில் தற்போது நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ‘லங்கா மெட்ரோ ட்ரான்சிட்’ பஸ் சேவையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியானது.
இத்திட்டத்திற்கான தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருவதுடன், இதற்கான பஸ்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னோடித் திட்டம் (Pilot Project) ஆரம்பத்தில் மேல் மாகாணத்தில் கொழும்பைச் சுற்றியுள்ள ஆறு முக்கிய வீதிகளில் நடைமுறைப்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், பின்னர் மூன்று ஆண்டுகளுக்குள் எட்டு முக்கிய நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும்.
கொழும்பு நகருக்குள் தினமும் நுழையும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன்போது பஸ் முன்னுரிமைப் பாதைகளை (Bus Priority Lanes) அடையாளப்படுத்துவதன் அவசியத்தையும் அதன் வினைத்திறனைப் பேணுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்கு வினைத்திறனான, பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான கௌரவமான சேவையை வழங்குவதற்காக ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பிலும் விரைவான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
